படிப்படியாக முன்னுக்கு வரணுமா? கொலுப்படி சொல்லும் தத்துவம் இதுதான்!

படிப்படியாக முன்னுக்கு வரணுமா? கொலுப்படி சொல்லும் தத்துவம் இதுதான்!
Updated on
1 min read

வி.ராம்ஜி

நவராத்திரியில் மிக முக்கியமானது குமரி பூஜை. இரண்டு முதல் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல வேடங்கள் அணிவித்து, அந்த அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

பல்வேறு சக்தி அம்சங்கள் இருந்தாலும், மிக முக்கிய அம்சங்களான குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்ரா வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரீட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி, மகேஸ்வரி, கௌமாரி, வாராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டி என்று இந்த நாமாக்களை சொல்லி ஒவ்வொரு இரவும் பூஜிக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தங்களின் வசதிக்குத் தக்கபடி, குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற கணக்கில் கொலு படிகள் அமைத்து அதில் கடவுள் அவதார சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவை, மிருகங்கள், காய்கறி, பழவகைகள் முதலான பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடலாம். அப்படி வழிபடுகிற வேளையில், தேவியின் திருநாமங்களைச் சொல்லுவதும் தேவி மகாத்மியம் பாராயணம் சொல்லுவதும் ரொம்பவே சிறப்பு.

மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு மாவிலை சொருகி, அதன் மீது தேங்காய் வைக்கலாம். அதன் முன்பு முப்பெருந்தேவியரான சக்தி, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும்.

அடுத்தடுத்த படிகளில் சுவாமி சிலைகள், இறைவனின் மற்ற அவதாரங்கள், தட்சிணாமூர்த்தி போன்றவற்றையும், பின்னர் சாய்பாபா, ஆதிசங்கரர், மகாபெரியவர், ஸ்ரீரமணர், பகவான் யோகி ராம்சுரத்குமார் முதலான மகான்களின் சிலைகள், பிறகு மனிதர்கள், அதன் கீழே விலங்குகள், பூச்சிகள், அதற்கும் கீழே காய்கறி, பழ வகைகள், பாத்திரங்கள் போன்ற பொம்மைகளை வைக்கலாம்.

உயிரற்ற பொருட்களும் குறைந்த அறிவுள்ள பொருட்களும் கீழ் நிலையில் இருக்கின்றன. படிப்படியாக ஞானம் பெற்றால் உயர்நிலையை அடையலாம் என்பது இதன் தாத்பர்யம். மாலையில் கொலு படி அருகில் கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

அவரவர் வசதிப்படி பொங்கல், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். இசை என்பது பக்தியின் ஒரு வடிவம். பாடத் தெரிந்தவர்கள், இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்கள் தினமும் மாலை நேரத்தில் பக்திப் பாடல்கள் பாடுவது இன்னும் சிறப்பு. ஸ்லோகங்கள் சொல்லலாம். உற்றார், உறவினர்கள், நண்பர்களை கொலுவுக்கு அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்ளலாம்.

நிவேதனம் செய்த பொங்கல், சுண்டல் போன்றவற்றுடன் ஜாக்கெட் பிட், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், தேங்காய், பரிசு பொருட்கள் கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறலாம்.

நவராத்திரி நாளில், ஒருவருக்கொருவர் ஆசியையும் அன்பையும் வெளிப்படுத்தி நல்லுறவுடன் திகழுங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in