

வி.ராம்ஜி
நவராத்திரி தொடங்கிவிட்டது. இன்று தொடங்கி இந்த ஒன்பது நாட்களும் கொலு வைப்பதும் சக்தியை வழிபடுவதும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி மகிழ்வதும் என விமரிசையாக நடைபெறும். இந்த வழிபாட்டில், மிக முக்கியமானது அகண்ட தீபம்.
நவராத்திரி விழாவின் போது, தினமும் தேவி மகாத்மியம் பாராயணம் செய்வது நல்லது. சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி முதலானவற்றைப் பாராயணம் செய்து ஜபித்து அம்பிகையை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
இதேபோல், அகண்ட தீபம் ஏற்றி வழிபடும் முறையும் உள்ளது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அகண்ட தீபம் என்பது அகலமான பாத்திரத்தில் அல்லது விளக்கில் தீபமேற்றி வழிபடுவது அல்ல. ஒரு தீபத்தை, அது அணையாமல் எரிந்து கொண்டே இருக்கச் செய்வது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களோ அல்லது கடைசி நாளன்றோ அகண்ட தீபத்தை ஏற்றி வைக்கலாம்.
அம்பாளை ஆவாஹனம் செய்த இடத்தில், அல்லது பூஜையறையில் மணைப்பலகையை வைக்கவேண்டும். அதன் மேல், மூன்று கோணமாக சந்தனத்தால் கோலம் போல் கோடுகள் இட வேண்டும். அதற்கு நடுவே, சந்தனம் குங்குமம் இட்டு, பூக்களால் அலங்கரித்து, அதன் மீது விளக்கை வைக்க வேண்டும். இரண்டு விளக்குகளையும் ஏற்றி வைக்கலாம்.
இதில் ஒரு விளக்கு வெள்ளி மற்றும் பித்தளை விளக்காகவும் இன்னொன்று அகல் விளக்காகவும் இருப்பது விசேஷம். முடிந்தவர்கள், ஒன்பது நாட்களும் விளக்கேற்றி வைக்கலாம். அது இன்னும் கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!
இந்த விளக்குகள், தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கவேண்டும். இதுவே அகண்ட தீபம். பூஜைகள் முடிந்த பிறகு இந்த விளக்குகளை தானமாகத் தருவது, நம் வீட்டில் இன்னும் இன்னும் சுபிட்சங்களை வாரி வழங்கும். சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!