Published : 27 Sep 2019 09:56 AM
Last Updated : 27 Sep 2019 09:56 AM
வி.ராம்ஜி
பாவமும் தோஷமும் போக்குகிற மகாளய பட்ச அமாவாசை தினம் நாளை சனிக்கிழமை வருகிறது (28.9.19). நாளைய தினம் மறக்காமல் பித்ரு தர்ப்பணம் செய்து, முன்னோர் ஆராதனையை செய்யுங்கள். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் தகர்ந்து போகும். காரியம் யாவும் வெற்றியைத் தரும்.
மாதந்தோறும் அமாவாசை தினம் வரும். இந்த அமாவாசை என்பதே முன்னோருக்கான நாள் என்கிறது சாஸ்திரம். எனவே மாதந்தோறும் வருகிற அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அவர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, தீபதூபம் காட்டி நமஸ்கரிக்க வேண்டும்.
அவர்களுக்குப் பிடித்த உணவை படையல் செய்து, காகத்துக்கு இடவேண்டும். சாதத்தில் எள் சேர்த்து அதையும் காகத்துக்கு வைக்கலாம். அதேபோல, அமாவாசை தினத்தன்று, நம்மால் முடிந்த அளவுக்கு ஒரு நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம். இவை அனைத்தும் நமக்கும் நம் குடும்பத்துக்கும் நன்மைகளை வாரி வழங்கும். வீட்டின் தரித்திரத்தையெல்லாம் துடைத்துவிட்டு, ஐஸ்வரியம் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாத அமாவாசைக்கே இவ்வளவு மகிமையும் பலன்களும் என்றால், மூன்று அமாவசைகளைக் குறிப்பிட்டே சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதாவது தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் இன்னும் மகத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்று அமாவாசைகளிலும் மறக்காமல், பித்ருக்கள் எனப்படும் முன்னோர் ஆராதனையைச் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
நாளை அமாவாசை (28.9.19 சனிக்கிழமை). மகாளய பட்சம் எனப்படும் முன்னோருக்கான 15 நாட்களும் முடிந்து நிறைவு நாளாக வருவதுதான் மகாளய பட்ச அமாவாசை. இந்த நாளில், அதாவது நாளைய தினம் மறக்காமல் பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள். ஆச்சார்யர்களுக்கு அரிசி, வாழைக்காய், வெற்றிலை, பாக்கு, தட்சணை கொடுத்து நமஸ்கரிப்பதால், முன்னோர் குளிர்ந்து போவார்கள். நம்மை ஆசீர்வதித்து அருளுவார்கள் என்பது ஐதீகம்.
நாளைய தினம் மறக்காமல் பித்ருக் கடன் செலுத்துங்கள். முன்னோரை ஆராதனை செய்யுங்கள். சகல பீடைகளும் தரித்திரங்களும் விலகும். ஐஸ்வரியம் பெருகும்.