Published : 24 Sep 2019 12:45 PM
Last Updated : 24 Sep 2019 12:45 PM
வி.ராம்ஜி
இறந்துவிட்ட நம் முன்னோர்களுக்காக, நாம் தர்ப்பணம் செய்கிறோம், திதி கொடுக்கிறோம். ஆனால், இறந்து போன பக்தனுக்காக, பெருமாளே திதி கொடுக்கிறார். நமக்கான நம் கடமையை, பெருமாளே செய்துகொடுக்கிறார். அப்படியொரு அற்புதமான ஸ்தலம் சென்னைக்கு அருகில், சென்னை செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கிறது. அந்தத் தலம்... நென்மேலி. அங்கே பெருமாளின் திருநாமம்... ஸ்ராத்த ஸம்ரக்ஷணப் பெருமாள்.
பித்ருக் கடனைத் தீர்க்க வாரிசு இல்லை. ஆண் வாரிசு இல்லை. மகள்தான் உண்டு. தானே தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இவருக்கு கதி மோட்சம் உண்டா? விபத்திலோ வேறு காரணத்தாலோ துர்மரணம் நிகழ்ந்துவிட்டவருக்கு, மோட்சகதி உண்டா? இதுவரை, பித்ருக்களுக்கு தர்ப்பணமோ திதியோ கொடுக்கவே இல்லை என்பவருக்கு இனியேனும் மன்னிப்பு உண்டா? பரிகாரம் இருக்கிறதா? பித்ரு சாபமெல்லாம் நீங்கிவிடுமா?
இவை அனைத்துக்கும் ஒரே பதில்... நென்மேலி ஸ்ராத்த ஸம்ரக்ஷணப் பெருமாள். நம் பித்ருக்களுக்கு அவரே திதி கொடுத்து, இதுவரை நாம் விட்டதையெல்லாம் ஈடுகட்டித் தருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில், செங்கல்பட்டில் இருந்து 7வது கிலோமீட்டரில் உள்ளது நென்மேலி திருத்தலம். இங்கே... மூலவரின் திருநாமம் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். உத்ஸவர்... ஸ்ரீ ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணப் பெருமாள்.
சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம். மூலவர் சுயம்புத் திருமேனி என்கிறது ஸ்தல் வரலாறு. இப்போதைய நென்மேலி கிராமம், அந்தக் காலத்தில் புண்டரீக நல்லூர் என அழைக்கப்பட்டது. அதாவது பிண்டம் வைத்த நல்லூர் எனப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
700 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றது. இந்தப் பகுதியை யக்ஞநாராயண சர்மா என்பவர் திவானாகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சரஸ வாணி. இருவரும் பெருமாளின் மீது மாறா பக்தி கொண்டிருந்தார்கள்.
கையில் வசூலித்த பணத்தையெல்லாம் இந்த நென்மேலி பெருமாளுக்கே செலவு செய்தார்கள். இதனால், ஆற்காடு நவாப்பிடம் வரிப்பணத்தையெல்லாம் செலுத்தமுடியாத நிலை. இதை அறிந்த நவாப், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடிவுசெய்தார். அதை அறிந்த இந்தத் தம்பதி, திருவிடந்தை குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். அப்போது உயிர் பிரியும் தருணத்தில், ‘எங்களுக்கு வாரிசு இல்லையே. எங்களின் ஈமக்காரியங்களை செய்ய எவரும் இல்லையே’ என வருந்தினார். இருவரும் இறந்தார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் பெருமாளே வந்து சிராத்தம் உள்ளிட்ட ஈமக்காரியங்களைச் செய்தார் என்கிறது ஸ்தல வரலாறு.
அன்றில் இருந்து இன்று வரை, பிள்ளை இல்லாதவர்களுக்கோ, அகால மரணம் அடைந்தவர்களுக்கோ, ஏதோவொரு சூழலால், சிராத்தம் தடைப்பட்டு போயிருந்தவர்களுக்கோ, இந்தக் கோயிலில் சிராத்தம் செய்யப்படுகிறது. அதாவது பெருமாளே சிராத்தம் செய்வதாக ஐதீகம்.
இங்கே, ஆலயத்தில் பெருமாளின் திருப்பாதம் உள்ளது. அந்தப் பாதத்தைக் கொண்டுதான் சிராத்த காரியங்கள் செய்யப்படுகின்றன. இங்கு, காலை முதல் மதிய வேளைக்குள் சிராத்தம் செய்யப்படுகிறது. வெண்பொங்கல், தயிர்சாதம், பிரண்டையும் எள்ளும் கலந்த துவையல் ஆகியவை நைவேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அதில் இருந்து பிண்டமாக எடுத்து, முன்னோருக்கு பிண்டம் வைத்து பூஜிக்கப்படுகிறது.
அதன் ஒருபகுதியை அவர்களுக்கு உணவாகவும் இன்னொரு பகுதி தானமாகவும் வழங்கப்படுகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் முதலான புண்ணிய க்ஷேத்திரங்களில் சிராத்தம் செய்த பலன், நென்மேலி தலத்துக்கு வந்து சிராத்தம் செய்தால் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், பித்ரு சாபம் உள்ளவர்கள், வீட்டில் அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் தோஷம் உள்ளவர்களின் குடும்பத்தார், இங்கு வந்து சிராத்தம் செய்வது ரொம்பவே நல்லது.
இங்கு, தினமும் சிராத்த காரியங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி முதலான புண்ணிய திதிகளில் இங்கு வந்து சிராத்தம் செய்வது கூடுதல் விசேஷம் என்கிறார்கள். வீட்டில் சகல தோஷங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும் என்கிறார் கோயிலின் சம்பத் பட்டாச்சார்யர்.
நமக்காக, நம் குடும்பத்துக்காக, நம் பரம்பரை நன்மைக்காக, நம் முன்னோர்களுக்காக சிராத்தம் செய்து வைக்கும் சிராத்த சம்ரக்ஷண பெருமாளை தரிசித்துப் பிரார்த்திப்போம். பித்ரு தோஷம் தொலைந்து, அவர்களின் ஆசியுடன் சந்ததி சிறக்க வாழ்வோம்.
சிராத்த சம்ரக்ஷண பெருமாள் கோயில் வீடியோவைக் காண :