

வி.ராம்ஜி
மகாளய பட்ச காலத்தில், நவமி திதியும் வரும். இந்த நவமி திதியை, அவிதவா நவமி என்று பெயர். அவிதவா என்றால் கணவருடன் இருக்கும் சுமங்கலி என்று அர்த்தம். அதாவது சுமங்கலிகளுக்கு உரிய நன்னாள்.
பெண்ணானவள், தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து, தர்ம காரியங்கள் பலவற்றையும் செய்கிறாள். சடங்கு, சாங்கியம், தர்மம் உட்பட எல்லாவற்றையும் கணவன் செய்யும் போது, மனைவியும் உடன் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
பெண்ணானவள், அதாவது மனைவியானவள், சுமங்கலியாக இறந்துவிட்டாலும் கூட, அவளின் கணவர் செய்யும் எல்லாக் காரியங்களிலும் அவளை இருத்தியே, முன்னிலைப்படுத்தியே எல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். அப்போது ‘அவிதவா’ என்று சாஸ்திரம் அழைக்கிறது.
அவிதவா பெண்கள் என்றால், சுமங்கலி என்று அர்த்தம். அப்படி சுமங்கலியாக இறந்தவர்களுக்காக, அவிதவா நவமி என்று அந்தநாள் சொல்லப்படுகிறது.
அவிதவா நவமி நாளில், தன் கணவருக்கு முன்னதாக இறந்துவிட்டவர்களின் ஆன்மா சாந்தி அடையும் பொருட்டு, அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக, சுவாசினி என்று சொல்லப்படும் கன்னிப்பெண்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்கு வஸ்திரம் தந்து, அவர்களுக்கு உணவளித்து மங்கலப் பொருட்கள் வழங்கவேண்டும்.
மகாளய பட்சத்தின் அவிதவா நவமி நாளைய தினம் (23.9.19 திங்கட்கிழமை). இந்தநாளில் வழக்கம் போல், பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும். மேலும் சுமங்கலிப் பெண்கள் எவருக்கேனும் புடவை ஜாக்கெட் வழங்குங்கள். இதனால் பித்ருக்களின் ஆசீர்வாதமும் சுமங்கலியாக இறந்துவிட்ட பெண்களின் ஆசீர்வாதமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதனால், குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். சகல ஐஸ்வரியமும் கிடைக்கப் பெறுவார்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கணவனின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம்.
முக்கியமாக, ஜாதகத்தில், சுக்கிரன் நீசம் அடைந்ததால் ஏற்படும் தம்பதிக்கு இடையேயான ஒற்றுமை இல்லாத நிலை, விலகிவிடும். ஒற்றுமை மேலோங்கி, கருத்தொருமித்து காணப்படும் சூழ்நிலை உருவாகும். வீட்டில், தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் வீட்டில் நடந்தேறும்.
அவிதவா நவமி நாளில், சுமங்கலிகளுக்கு ஒரு ஜாக்கெட் பிட்டாவது வாங்கிக் கொடுங்கள்.