பித்ருக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - மகாளய பட்சம் ஸ்பெஷல் 

பித்ருக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - மகாளய பட்சம் ஸ்பெஷல் 
Updated on
1 min read

வி.ராம்ஜி


தவறு செய்வதெல்லாம் மனித இயல்புதான். அந்தத் தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே மரபு. வாழ்நாளில், அப்படி எவரிடமேனும் நாம் மன்னிப்புக் கேட்டிருப்போம். நம்மிடமும் எவரேனும் மன்னிப்புக் கேட்டிருப்பார்கள்.


அதேபோல், நாம் நம் முன்னோர் வழிபாட்டைச் செய்யாமல் இருந்தால், அது தவறுதானே. ‘இந்தக் குடும்பத்துல வந்து பொறந்து, மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படுறேன்’ என்று ஏளனமாக நம் பரம்பரையை, நம் பித்ருக்களை, நம் பெற்றோரை சொல்லிப் புலம்பியிருப்போம். அது தவறில்லையா? அப்படியான தவறுக்கு, நாம் நம் முன்னோரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்தானே. அப்படி மன்னிப்பு கேட்கும் நாள்தான்... மகாளய பட்ச புண்ணிய காலம் என்கிறது சாஸ்திரம்.


இந்த மகாளய பட்ச புண்ய காலமான 15 நாட்களும் நாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நாட்கள். அவர்கள் நம்மை மன்னித்து அருளும் நாட்கள்.


‘தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ... நான் என் கடமைகளைச் செய்யாமல் விட்டிருக்கிறேன். அதற்கு என்னையும் என் குடும்பத்தையும் மன்னித்துவிடுங்கள். அதேபோல், வாழ்க்கை வெறுத்து, கஷ்ட நஷ்ட காலங்களின் போது, உங்களை ஏளனமாக, அவமரியாதையாகப் பேசியிருக்கிறேன். இதற்காக, ஆத்மார்த்தமாக மன்னித்துவிடுங்கள்’ என்று நம் முன்னோருக்குச் செய்யும் பூஜையின் போது, மறக்காமல் மன்னிப்பு கேளுங்கள்.


நீரடித்து நீர் விலகாது என்பார்கள். அதேபோல், நம் முன்னோர்கள், நம்மை மன்னித்துவிடுவார்கள். அவர்கள் மன்னித்துவிட்டாலே, நம்முடைய பித்ரு தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். அவர்கள், நம்மையும் நம் குடும்பத்தையும் நம் குழந்தைகளையும் பரிபூரணமாக ஆசீர்வதித்து அருளுவார்கள்.


ஆகவே, மகாளய பட்ச புண்ய காலமான இந்த நாட்களில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் படங்களை பூக்களால் அலங்கரியுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவைப் படையலிடுங்கள். அந்த உணவை, பட்சணங்களை நான்குபேருக்கு வழங்குங்கள்.
அப்பாவுக்குப் பிடித்த நிறத்தில் சட்டை, அம்மாவுக்குப் பிடித்த நிறத்தில் புடவை என எவருக்கேனும் வழங்குங்கள். முடிந்தால், தினமும் நான்குபேருக்கு உணவுப்பொட்டலம் வழங்குங்கள்.


எல்லாவற்றுக்கும் மேலாக, பித்ருக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். அந்த மன்னிப்புதான், உங்கள் கஷ்டங்களையெல்லாம் துடைத்தெடுக்கும். நஷ்டங்களையெல்லாம் லாபமாக்கும். வீட்டில் சுபிட்சத்தை குடிகொள்ளச் செய்யும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in