Published : 20 Sep 2019 10:50 AM
Last Updated : 20 Sep 2019 10:50 AM
வி.ராம்ஜி
மகாளய பட்ச புண்ணிய காலத்தில், முடிந்தவரை தானங்கள் செய்வோம். .பித்ருக்களை நினைத்துச் செய்யப்படும் இந்த தானங்களால், நம் இல்லத்தில் தனம் - தானியம் பெருகும். சுபிட்சம் கிடைக்கப் பெறுவோம்.
உயர்வு என்பது, காசு பணமோ, வீடு வாசலோ, சொத்து சேர்க்கையோ அல்ல. நிம்மதியும் நிறைவும், சந்தோஷமும் மதிப்பும் தான், வாழ்வின் உன்னதம்; அதுவே உயர்வு. அப்பேர்ப்பட்ட மகோன்னதமான உயர்வைத் தரவல்லது... முன்னோர்களை ஆராதிப்பது. பித்ருக் கடன் செய்வது. அந்த ஆராதனையைச் செய்வதற்கு உகந்த காலங்களில் முக்கியமானது மகாளய பட்ச புண்ய காலம்.
நம் முன்னோர்கள், ஆத்மாவாக இருந்து அனுதினமும் நம்மை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம்தான் இந்த வேகமான உலகத்தில், எதுகுறித்தும் புரிந்து உணராமல் இருக்கிறோம்.
கர்ம வினைகளால்தான் அனைத்தும் நிகழ்கின்றன என்கின்றன தர்ம சாஸ்திரங்களும் ஜோதிட சாஸ்திர நூல்களும். அதேசமயம் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாவங்களைத் தொலைப்பதற்கு, பாவங்களில் இருந்து விடுபடுவதற்கு முன்னோர் வழிபாடு என்பது மிக மிக அவசியம் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். .
இந்த மகாளய பட்ச புண்ய காலத்தில், தினமும் பித்ரு ஆராதனை செய்து, நம்மை பலப்படுத்திக் கொள்வோம். பௌர்ணமி துவங்கி அமாவாசை வரையிலான இந்த மகாளய பட்ச காலத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். அவர்களின் நினைவாக தானங்கள் வழங்குவோம். அது நமக்கு தன - தானியப் பெருக்கத்தைக் கொடுக்கும். இல்லத்தில் சுபிட்சம் நிலவும்.
வீட்டில், தடைப்பட்டிருந்த திருமணம் முதலான சுபகாரியங்கள் அனைத்தும் விமரிசையாக நடந்தேறும்.