

வி.ராம்ஜி
புரட்டாசி சஷ்டியில் வேலனை தரிசனம் செய்யுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வான் வடிவேலன். இன்று 20.9.19 வெள்ளிக்கிழமை சஷ்டி திதி. முருகனை மனதார வேண்டுங்கள். .
மாதந்தோறும் சஷ்டி திதியன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதும் முருகன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் ரொம்பவே விசேஷம். மாத சஷ்டியில் விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், கந்த சஷ்டியின் போது தவறாமல் விரதம் இருப்பார்கள்.
மேலும் மாத சஷ்டியின் போது, வீட்டில் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு செவ்வரளி முதலான செந்நிற மலர்கள் சூட்டி, சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம்.
எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். மேலும் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு விநியோகிக்கலாம். இன்னும் முடிந்தால், நான்குபேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வீட்டில் இருந்த தரித்திர நிலை மாறும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். சஷ்டியில், முருகப்பெருமானுக்கு குளிரக்குளிர அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதை கண்குளிர தரிசியுங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குங்கள். வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .