

வி.ராம்ஜி
மகாளய பட்ச புண்ணிய காலம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாள் மகா பரணி என்று போற்றப்படுகிறது.
கடந்த 14.9.19 அன்றில் இருந்து மகாளய பட்ச காலம் தொடங்கியது. அன்று தொடங்கி பதினைந்து நாட்களும் தினமும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து, தீபதூப ஆராதனைகள் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
அதேபோல், ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு பொருள், ஆடை, குடை, செருப்பு முதலானவற்றை ஆச்சார்யர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ தானம் செய்வது மிகவும் நல்லது. இதனால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்.
மகாளய பட்ச காலங்களில், மகா பரணி எனப்படும் நாள் மிக மிக உன்னதமான, உயிர்ப்பான நாள் என்று ஆச்சார்யர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த ஒருநாளில், நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தாலும் பூஜைகளாலும் ஆராதனைகளாலும் பிரார்த்தனைகளாலும் நமக்கு இதுவரை இருந்த பித்ரு தோஷம் முதலானவை அனைத்தும் நீங்கிவிடும் என்பது உறுதி.
அதேபோல், நாளையதினமான மகாபரணி நாளில், யாருக்கேனும் வேஷ்டி அல்லது புடவை வழங்குங்கள். செருப்பு, குடை வாங்கிக் கொடுங்கள். வயதானவர்களுக்கு போர்வை வழங்குங்கள். ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தேன், நெய், தயிர், குடை, செருப்பு, பால், அரிசி முதலானவையும் தானமாக வழங்கலாம்.
நாளைய தினம் மகாபரணி எனும் மகத்தான நன்னாள். அதேபோல், புரட்டாசி மாதப் பிறப்பு. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் செய்ய அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம்.
ஆகவே, புரட்டாசி மாதப் பிறப்பு மற்றும் மகாபரணி எனும் புண்ணிய நாளான நாளைய தினம், உங்கள் முன்னோரை ஆராதனை செய்யுங்கள். அவர்களுக்கு தர்ப்பணம் கொடுங்கள். தானம் செய்யுங்கள். உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
உங்கள் வம்சம், வாழையடி வாழையென வளரும்; செழிக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். திருமணம் முதலான சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும்!