Published : 17 Sep 2019 09:56 AM
Last Updated : 17 Sep 2019 09:56 AM

தானம் செய்யுங்களேன்!  - மகாளய பட்ச புண்ணியம்

வி.ராம்ஜி


மகாளய பட்ச புண்ணிய காலம் என்பது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. இந்த 15 நாட்களும் பித்ருக்கள் எனப்படும் முன்னோருக்கு உரிய நாட்கள். இந்த நாட்களில், முன்னோரை நினைத்து நாம் செய்யும் தானங்கள், மிகுந்த புண்ணியங்களைத் தரும்; பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்யும் என்கிறது சாஸ்திரம்.


எனவே, நடந்து கொண்டிருக்கும் மகாளய பட்ச காலத்தில், ஒவ்வொரு நாளும் ஏதேனும் தானம் செய்யுங்கள். எவருக்கேனும் தானம் செய்யுங்கள்.
இந்த காலகட்டத்தில், அன்னம் தானம் அதாவது நான்குபேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். அன்னதானம் செய்வதால், வறுமை நீங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


இறந்துவிட்ட நம் அப்பாவை நினைத்தோ, முன்னோர்களை நினைத்தோ, அம்மாவை நினைத்தோ, வயதானவர்களுக்கு ஏழைகளுக்கு ஆச்சார்யர்களுக்கு வேஷ்டி, புடவை முதலான ஆடைகளை வழங்குங்கள். ஆடை தானம் செய்வதால், நமக்கும் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கியம் பெருகும். தரித்திரம் விலகும். ஆயுள் அதிகரிக்கும்.


நீண்டகாலமாக புத்திர பாக்கியம் இல்லையே என வருந்துவோர், முடிந்த அளவு ஐந்தாறு பேருக்கு தேன் வழங்குங்கள். இதனால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


விளக்கு அகல்விளக்கு, காமாட்சி விளக்கு என எவருக்கேனும் தானம் வழங்கினால், இல்லத்திலும் உள்ளத்திலும் இருந்த இருள் விலகும். கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.


அரிசி தானம் செய்தால், தனம் தானியம் பெருகும். நாம் இதுவரை தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
பழங்கள் தானம் செய்தால், புத்தியில் தெளிவு பிறக்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப்பெறுவோம்.


பசு தானம் செய்வது ரொம்பவே விசேஷம். இதுவரை இருந்த பித்ருக்கடன் அடையும். பித்ரு தோஷங்கள் யாவும் விலகும். பித்ருக்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைத்து, சந்ததி பல்கிப் பெருகுவார்கள். வாழையடி வாழையென செல்வமும் வம்சமும் வளரும்.
பால் தானம் செய்தால், துக்கங்கள் அனைத்தும் விலகிவிடும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.


தங்கம் தானம் செய்தால், குடும்பத்தில் உள்ளவர்களின் அனைவரது தோஷமும் விலகிவிடும். பித்ருக்களின் ஆசி, குருவருள், இறையருள் என சகலமும் கிடைக்கப் பெற்று, சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம்.


தேங்காய் தானம் செய்தால், நினைத்தது நிறைவேறும். காரியம் அனைத்தும் வெற்றியைத் தரும்.


மேலும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் மகாளய பட்ச காலத்தில், முன்னோரை நினைத்து நாம் எதை தானமாகக் கொடுத்தாலும் அது புண்ணியத்தையும் நல்லதையும் மட்டுமே தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x