Published : 16 Sep 2019 09:38 AM
Last Updated : 16 Sep 2019 09:38 AM

மகாளய பட்ச காலத்தில் பித்ரு ஆராதனை...  எந்த நாளுக்கு என்னென்ன பலன்கள்? 

வி.ராம்ஜி

மகாளய பட்ச காலம் தொடங்கிவிட்டது. தினமும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை ஆராதனை செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். இந்த 15 நாட்களும் முன்னோர்கள் நம் வீட்டுக்கு வந்து நாம் எப்படி நடந்துகொள்கிறோம், என்ன செய்கிறோம் என்று பார்ப்பார்கள் என்கின்றன ஞானநூல்கள்.


இந்த பதினைந்து நாளின் ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பித்ரு வழிபாட்டுக்கும் தர்ப்பணத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கின்றன.


முதல்நாள் தர்ப்பணம் செய்தால் (பிரதமை) செல்வம் நம்மிடம் சேரும். தங்கும்.

2ம் நாளான துவிதியை தினத்தில் தர்ப்பணம் செய்தால், நம் குழந்தைகள் நல்லவர்களாகவும் கல்வியில் சிறந்து விளங்குபவர்களாகவும் திகழ்வார்கள்.


3ம் நாளான த்ரிதியை தினத்தில் தர்ப்பணம் செய்து வழிபட்டால், நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இதனால் வாழ்வில் நல்ல நல்ல உயர்வுகள் கிடைக்கப் பெறலாம்.

4ம் நாளான சதுர்த்தியில் (நாளைய தினம் 17.9.18) பித்ருக்களை தர்ப்பணம் செய்து வழிபட்டால், எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.


5ம் நாளான பஞ்சமி திதியில் 18.9.19 அன்று தர்ப்பணம் செய்து வழிபட்டால் (அன்றைய தினம் மகா பரணி. இது இன்னும் விசேஷம்), சொத்துகள் சேர்க்கும் பலமும் பணமும் பெருகும். ஆபரணச் சேர்க்கை நிகழும். இவையெல்லாம் சந்ததிக்கும் எதிர்காலத்தில் பலன் தருவதாக அமையும்.


6ம் நாளான சஷ்டி திதியில் 19.9.19 வியாழக்கிழமை அன்று தர்ப்பணம் செய்து பித்ருக்களை வணங்கி வழிபட்டால், பேரும்புகழும் கிடைக்கப்பெறுவோம். மரியாதையும் கெளரவமும் கூடும்.


7ம் நாளான சப்தமி திதியில், 20.9.19 வெள்ளிக்கிழமை அன்று பித்ருக்களை தர்ப்பணம் செய்து ஆராதித்து வழிபட்டால், உயர்ந்த பதவி, கெளரவமான பதவிகளெல்லாம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.


8ம் நாளான அஷ்டமி திதியில், 21.9.19 சனிக்கிழமை அன்று முன்னோர்களை தர்ப்பணம் செய்து வணங்கினால், புத்தியில் தெளிவு பிறக்கும். காரியம் வீரியமாகும். மனக்கிலேசங்கள் விலகும்.


9ம் நாளான நவமி திதியில், 22.9.19 ஞாயிற்றுக்கிழமை அன்று பித்ரு வழிபாடு செய்து, தர்ப்பணம் செய்து ஆராதனை செய்தால், வீட்டில் நடக்க வேண்டிய சுபகாரியங்களில் இருந்த தடைகளெல்லாம் நீங்கும். திருமணம் கைகூடும். நல்ல, சத்தான, பெண் குழந்தைகள் பிறக்கும்.


10ம் நாளான தசமி திதியில், 23.9.19 திங்கட்கிழமை அன்று பித்ரு வழிபாடு செய்தால், நீண்டகால எண்ணங்களும் ஏக்கங்களும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் குடிகொள்ளும்.


11ம் நாளான ஏகாதசி திதியில், 24.9.19 செவ்வாய்க்கிழமை அன்று முன்னோர் ஆராதனை செய்து வணங்கினால், குழந்தைகள் கல்வியிலும் பொது அறிவிலும் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகளால், பரம்பரைக்கே பெருமைகள் கிடைக்கும். கலைகளிலும் சிறந்து திகழ்வார்கள்.


12ம் நாளான துவாதசி திதியில், 25.9.19 புதன்கிழமை அன்று பித்ரு ஆராதனை செய்து பிரார்த்தனை செய்தால், ஆபரணங்கள் சேர்க்கும் சுபிட்ச நிலை உருவாகும். வாகனங்கள் வாங்கும் யோகம் கிட்டும். தனம், தானியம் பெருகும். ஆடைகளுக்குப் பஞ்சமிருக்காது.


13ம் நாளான திரயோதசி திதியில், 26.9.19 வியாழக்கிழமை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து, வழிபட்டால், விவசாயம் பெருகும். நிலம் செழிக்கும். பூமி தொடர்பான அனைத்து விஷயங்களும் நல்லவிதமாக நடந்தேறும். பொருள் சேர்க்கை நிகழும்.


14ம் நாளான சதுர்த்தசி திதியில், 27.9.19 வெள்ளிக்கிழமை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வேண்டிக்கொண்டால், நாம் இதுவரை செய்த பாவமெல்லாம் நீங்கும். புண்ணியங்கள் பெருகும். பித்ரு தோஷம், பித்ருக்களின் கோபம் அனைத்தும் காணாமல் போகும். நாம் மட்டுமின்றி நம் சந்ததியினர் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.


15ம் நாளான மகாளய அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்கள் படங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்து வழிபட்டால், முன் ஜென்ம பாவங்கள் விலகும். இந்த பதினைந்து நாளும் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ... அவை அனைத்துமே கிடைக்கப் பெறலாம். வீட்டின் தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


ஆகவே, இந்த மகாளய பட்ச காலங்களில், தினமும் முன்னோர் ஆராதனை செய்யுங்கள். அவர்களை நினைத்து, நான்கு பேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். அவர்களின் படங்களை பூக்களால் அலங்கரியுங்கள். முக்கியமாக, துளசி சார்த்துங்கள். பித்ருக்கள் குளிர்ந்து போவார்கள். நாம் குளிரக்குளிர ஆசீர்வதிப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x