

சித்திரைத் திருவிழாவுக்குப் பெயர் பெற்ற மதுரை அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தேரோட்டமும் புகழ்பெற்றது. பெருமாளே படுத்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட, திருமாலிருஞ்சோலை மலையின் பின்னணியில் இந்தத் தேர் அசைந்து வரும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கும். மதுரைக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் வருகை தரும் சுந்தரராஜபெருமாள், இந்தத் தேரில் அனந்தநாராயண பெருமாளாக ஸ்ரீ தேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்ணுக்குள் புதைந்திருந்த தெப்பக்குளம் தோண்டி எடுக்கப்பட்டு, சரிந்திருந்த படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டன. அப்போதே 400 ஆண்டுகள் பழமையான கோயில் தேரையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் வழங்கிய நன்கொடை மூலம் ரூ.1 கோடியில் தேரைப் புனரமைக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, ஸ்தபதி கே.செல்வம் தலைமையில் 15 பேர் கொண்ட தச்சர்கள் குழுவினர் தேரை வடிவமைக்கும் பணியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினர். இதற்காக பர்மாவில் இருந்து முதல்தரமான தேக்கும், வேங்கை மரமும் வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்தன.
புதிய தேர் தயார்
5 நிலைகளுடன், 51 அடி உயரம் கொண்ட தேர் உருவானது. சுமார் 62 டன் எடை கொண்ட இந்தத் தேரின் முன்புறம் விநாயகர், கருப்பண்ண சுவாமி, விஷ்ணுவின் தசாவதாரங்கள், ரதி, மன்மதன், முருகன் மற்றும் சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. இவ்வாறு தேரின் கீழ்ப்பகுதியில் 162 சுவாமி சிற்பங்கள், மேல் பகுதியில் 62 கலைச்சிற்பங்கள் என்று சுமார் 400 சிற்பங்கள் உள்ளன.
தேர் வெள்ளோட்டம்
அடுத்த மாதம் ஆடித்தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, புதிய தேரின் வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை (6-ம்தேதி) நடந்தது. மகாசம்ரோஜனம், கும்பஆபாஹனம் உள்ளிட்ட யாகங்கள் நடத்தப்பட்டு, அழகரின் உத்தரவைப் பெற்று தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. புதிய தேரில் சுவாமி எழுந்தருளும் இடத்தில் கற்கண்டு நிரம்பிய கும்பக்கலசம் வைக்கப்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். நான்கு மணி நேரம் நடந்த இந்த வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, ஆடி மாதம் புதிய தேரில் அழகர் வலம் வர இருப்பது உறுதியாகி உள்ளது.
தேர் வடம் பிடித்தவர்களில் கணிசமானவர்கள் பள்ளி மாணவ மாணவிகள். அவர்களில் ஒருவரான மகாலட்சுமி என்ற மாணவி தன்னுடைய அனுபவத்தை ஆச்சரியத்துடன் விவரித்தார். “நான் தேரை வடம்பிடித்து இழுத்தது இது தான் முதல் முறை. வடக்கயிற்றின் கனத்தையும், தேரின் பிரமாண்டத்தையும் பார்த்து முதலில் மிரட்சியாக இருந்தது. ஊர் கூடி தேர் இழுப்பது என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தை பிறகு தான் புரிந்து கொண்டேன்” என்றார்.
“பழைய தேரின் அழகும், அளவும் மாறாமல் அப்படியே புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. தேர் சிம்மாசனம் வரையில் 22 அடி உயரமும், கும்பம் வரையில் 51 அடி உயரமும் இருக்குமாறு வேங்கை மரத்தால் கட்டப்பட்டு, சிற்பங்கள் அனைத்தும் பர்மா தேக்கால் செதுக்கப்பட்டுள்ளது. வெள்ளோட்டம் மிகச்சிறப்பாக அமைந்ததால், தேரில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய எந்த அவசியத்தையும் பெருமாள் ஏற்படுத்தவில்லை. பழைய தேரில் இரும்புச் சக்கரமும், ஹைட்ராலிக் பிரேக்கிங் சிஸ்டமும் சமீபத்தில் தான் மாற்றப்பட்டது என்பதால், அதனை அப்படியே எடுத்துப் புதிய தேரில் பயன்படுத்தியுள்ளோம். மற்றபடி இது முழுக்க முழுக்க புதிய தேர்” என்றார் பொன்னமராவதியைச் சேர்ந்த ஸ்தபதி கே.செல்வம்.
படங்கள்: ஆர்.அசோக்