Published : 11 Sep 2019 03:28 PM
Last Updated : 11 Sep 2019 03:28 PM

பித்ருக்களைத் திட்டாதீர்கள் - மகாளய பட்சம் ஸ்பெஷல்

வி.ராம்ஜி

தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்பது ஐதீகம்.

தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) உரிய பலன்களை வழங்கும்.

மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது என்கிறது சாஸ்திரம். அப்படித் திட்டினால், பித்ரு சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதாக இருந்தால், எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், ஆடைகள் தானம் செய்வது மிக மிக நல்லது.


தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பும் ஆசியும் கிடைக்கும்.


மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்யம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.


பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.


தர்ப்பணம் மற்றும் சிராத்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி எதையும் சாப்பிடக் கூடாது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x