Last Updated : 15 May, 2014 05:40 PM

 

Published : 15 May 2014 05:40 PM
Last Updated : 15 May 2014 05:40 PM

முழு மனதோடு எற்றுக்கொள்வதே பக்தி

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மகான். வைணவ நெறியை போதித்தவர். விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரம் எனக் கருதப்படுகிறார். தான் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர். ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்தி ராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் ஜீவ சமாதி அடைந்து, இன்றும் தனது பக்தர்களுக்கு அருளும் ஆசியும் புரிந்துகொண்டிருக்கிறார்.

திம்மண்ண பட்டர் - கோபிகாம்பாள் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தார் ராகவேந்திரர். பெற்றோர் அவருக்கு வெங்கடநாதர் என்று பெயரிட்டனர். வெங்கடநாதர் சிறு வயதிலேயே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தன் அண்ணன் குருராஜ பட்டரிடம் வளர்ந்தார். அடிப்படைக் கல்வியை மதுரையில் பயின்ற அவர், சரஸ்வதியை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார். திருமண வாழ்க்கை கும்பகோணத்தில் தொடங்கியது.

கும்பகோணத்தில்தான் வெங்கடநாதர் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். இங்குதான் துவைத வேதாந்தம், இலக்கியம் கற்றார். சொற்பொழிவு விவாதங்களில் ஈடுபட்டார். இசையில் தேர்ச்சி பெற்றார். குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். இதற்காக மாணவர்களிடம் எந்த சன்மானமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவரும், அவரது குடும்பமும் வறுமையில் வாடியது. வறுமையில் வாடினாலும்கூடக் கடவுள் மேல் நம்பிக்கை சிறிதும் குறையாமலேயே வெங்கடநாதர் இருந்தார்.

அப்போது வெங்கடநாதரின் குருவான ஸ்ரீசுதீந்திர தீர்த்தார் அவரது மடத்திற்குப் பீடாதி பதியாக நல்ல வாரிசைத் தேடிக் கொண்டிருந்தார். சுதீந்திரருக்குப் பின் மடத்தின் பீடாதிபதியாக வர வெங்கடநாதரே ஏற்றவர் என்று கடவுள் கூறியதாக அவர் கனவு கண்டார். சுதீந்திரர் இதை வெங்கடநாதரிடம் தெரிவித்தார். வெங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் இருந்தார். இதனால், அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. பிறகு கடவுளின் ஆசியாலும் கலைவாணியின் அருளாலும் தனது முடிவை மாற்றிக்கொண்டார் வெங்கடநாதர்.

வெங்கடநாதர், தஞ்சாவூரில் 1621-ம் ஆண்டு சுதீந்திர மடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். அன்று முதல் வெங்கடநாதர் ராகவேந்திரர் அழைக்கப்படலாயினார். பீடத்திற்கு வந்த பிறகு பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் சொற்பொழிவு ஆற்றுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களைப் போதித்தல், உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் எனப் பல நற்காரியங்களில் ஈடுபட்டார். தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருள் புரிந்தார். இப்படிப் பல அற்புதங்களை நிகழ்த்தியபடி ஸ்ரீராகவேந்திரர் இருந்தார். தன்னை வெறுத்தவர்களையும் ஏற்றுக் கொள்ள வைக்கும் அளவுக்கு அவரது பணியும் சேவையும் அமைந்தது.

மனிதர்களின் வாழ்க்கை சிறப் பாக அமையவும், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும், பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பன குறித்தும் பல வாக்குகளை ஸ்ரீராகவேந்திரர் கூறியுள்ளார். ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்தபடி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவரது சீடர்கள், அவரைச் சுற்றி பிருந்தாவனச் சுவரை எழுப்பத் தொடங்கினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x