

வி.ராம்ஜி
* ராமேஸ்வரம், திருவண்ணாமலை, திருவாலங்காடு, திருவள்ளூர், திருச்சி அம்மா மண்டபம், திருவையாறு காவிரிக்கரை, பவானி கூடுதுறை, திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, , திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியம் தரக்கூடியது.
* திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் - பூந்தோட்டம் சாலையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக மிக விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இங்கே ஸ்ரீராமரும் லட்சுமணரும் தங்களுடைய தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்கிறது ஸ்தல புராணம்.
* மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை முதலானவை ஏற்படும் என்கிறது கருடபுராணம்.
* நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்காக, மகாளயபட்ச காலம், அமாவாசை முதலான நாட்களில் காமம் முதலான உணர்ச்சிகளைத் தூண்டும் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவற்றைத் தவிர்க்கச் சொல்கிறது சாஸ்திரம்.
* சாஸ்திரப்படி, சிராத்த காரியங்கள் செய்பவர்கள் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளிலும் உணவு உண்ணக்கூடாது.
* மகாளய பட்சத்தின், துவாதசி பனிரெண்டாம் நாளன்று பித்ரு தர்ப்பணத்தை தவறாமல் செய்யவேண்டும். இந்த நாளில், முன்னோர் ஆராதனையைச் செய்பவர்கள் சொர்ண லாபம் பெறுவார்கள் என்கிறது சாஸ்திரம். அதாவது, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவார்கள். .
* தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, தர்ப்பண காரியங்கள் செய்வது நல்லதுதான். அதேசமயம், குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் நியதி. ஆகவே, அவர்களின் பெயர்களை வீட்டுப் பெரியவர்கள் எவரிடமாவது கேட்டு வாங்கி எழுதிவைத்துக் கொள்ளவேண்டும்.
* குடும்பத்தில் சந்நியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம். அவர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைத்து, நம்மை நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் வாழவைக்கும்.
* கோயில்கள், திருக்குளங்கள், நதிக்கரை, கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.