Published : 10 Sep 2019 02:56 PM
Last Updated : 10 Sep 2019 02:56 PM

உங்கள் பித்ருக்களுக்கு தாகம், பசி - மகாளய பட்சம் ஸ்பெஷல் 

வி.ராம்ஜி

* ஒருவர், தன்னுடைய தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை’’ என சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் தெரிவித்ததாக விவரிக்கிறது புராணம்.

* பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வத்துக்கான பூஜைகளைச் செய்யக் கூடாது. வாசலில் கோலமிடுவதும் கூடாது. மேலும் நெற்றிக்கு இட்டுக்கொள்ளுதலும் செய்யக் கூடாது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்ய வேண்டும்.


* சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக இருக்கும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் அமாவாசையன்று தர்ப்பணத்தில், எள்ளும் தண்ணீரும் விட்டு தாகம் தணிக்கிறோம். உணவை காகத்துக்கு வழங்குகிறோம்.


* ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு. இவற்றில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .

* அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம். அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். வருத்தப்படுகிறார்கள். கோபத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் முன்னோர்கள் சிலர், சாபம் கூட விடுவார்கள். இதுதான் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்று சொல்லப்படுகிறது.


* நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் உங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். நீங்கள் விரும்புகிற காரியம் கைகூடும்.


* ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்திரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்லச் சொல்கிறது சாஸ்திரம். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும் என்பது ஐதீகம்.


* மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும் பசியும் அதிகமாகவே இருக்கும். அதனால்தான் இந்த 15 நாட்களும் அவசியம் தர்ப்பணம் செய்ய வலியுறுத்துகிறது சாஸ்திரம்.


* பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகை என்கிறது சாஸ்திரம். அதாவது தந்தை வகையைச் சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம். தாயார் வகையைச் சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் முதலானோர் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவுபடுத்தி, மகாளய பட்ச காலத்தில் மறக்காமல் தர்ப்பணம் செய்யவேண்டும்.
.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x