

வி.ராம்ஜி
ராமாயணத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் ‘சுந்தரகாண்டம்’ பகுதியும் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், சுந்தரகாண்டம் மிக நல்ல அதிர்வுகள் கொண்டது என்பார்கள். இதைப் படிக்கப் படிக்க, நம் வாழ்வில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நன்மைகளும் உயரங்களும் கிடைக்கும் என்பது உறுதி.
* காஞ்சி மகா பெரியவரிடம் ஒருமுறை, ஒருவர் வயிற்று வலியால் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றும் சொல்லி வருந்தினார். உடனே சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடுவதற்கு முன்னதாகப் படி என்று அருளினார் மகா பெரியவர். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்தே போனது. .
* சுந்தர காண்டம் முழுவதையும் ஒரே நாளில் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் சிவனாரே தெரிவித்துள்ளார்.
* சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிகச் சான்றோரும் ஆச்சார்யர்களும் விவரித்துள்ளனர்.
* சுந்தரகாண்டத்தை எந்த அளவுக்குப் படித்துக்கொண்டே இருக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
* ஆத்மார்த்தமாக சுந்தரகாண்டத்தைp படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் ஆகியவையெல்லாம் முடிவுக்கு வந்து விடும்.
* சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும் என்பது உறுதி. .
* சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், மன வலிமை உண்டாகும். மனோதிடம் பெருகும். மனத்தெளிவு பிறக்கும்.
* சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான, தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். கவலைகள் காணாமல் போகும். .
* சுந்தரகாண்டம் பாராயணம் செய்து, அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு பெருகும். ஆற்றல் கூடும். மங்காத புகழுடன் வாழலாம். நினைத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். துணிச்சலும் தைரியமும் பிறக்கும். இழந்ததையெல்லாம் மீட்பது உறுதி.
* சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவங்கள் அனைத்தும் தீரும். முடியாத, தடைப்பட்ட செயல்கள் யாவும் மிக எளிதாக நடந்தேறும்.
* ஆஞ்சநேயருக்கு வடைகளும் வெண்ணெய்யும் நைவேத்தியம் செய்தும், நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம். இழந்த சொத்துகளையும் மரியாதையையும் கிடைக்கப் பெறலாம்.
* ராம நவமியன்று விரதம் இருந்து ஸ்ரீராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிச்சயம்.
* ஸ்ரீராமருடன் மீண்டும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்தது சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். .
* ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால், சனியின் தாக்கத்தில் இருந்தும் பிடியில் இருந்தும் தப்பிக்கலாம். வந்த துன்பங்கள் யாவும் பனி போல் விலகிவிடும்.
* சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர் என்றொரு பகுதி வரும். எனவே, இதை அனுதினமும் சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம்.
* சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையைக் கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .
* சுந்தரகாண்டத்தை நீண்டகாலமாக பாராயணம் செய்பவர்களுக்கு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். மேலும் நவக்கிரக தோஷம் என்பதே எட்டிக்கூடப் பார்க்காது.
* மனதில் குழப்பம், கடன் தொல்லை என்பதான சூழலில், சுந்தரகாண்டம் படித்தால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். குழப்பம் தீரும். தெளிவு பிறக்கும்.
* சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.
* ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இதில் 2885 ஸ்லோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது என்பது பெருமைக்கு உரியது. சுந்தரகாண்டத்தின் வீரியத்தை உணர்ந்துகொள்ளலாம்.
* சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாகவும் ஆத்மார்த்தமாகவும் படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
சுந்தரகாண்ட பாராயணம் செய்வதால், ஊழ்வினையால் ஏற்பட்ட வினைகளை அகற்றிவிடும். .
சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தைகள் கல்விகேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள்.
* சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை புதன், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வணங்கி வந்தால், விரைவில் திருமணம் கைகூடும்.
* ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகத்தைப் பாராயணம் செய்து பூஜை செய்தால், மனோ தைரியம் உண்டாகும்.
*ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உறுதி. குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்கிறார்கள்.
*கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும். வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன் தரும் குழந்தையாக வளரும்.
. * சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும் என்பதைப் புரிந்து உணர்ந்து படித்தால், உத்தியோகத்தில் உயர்வு முதலானவை நிச்சயம்.
* சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. எனவே, அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.
* சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* காயத்ரி மந்திரத்தில் எந்த அளவு சக்தி உள்ளதோ, அதற்கு இணையாக சுந்தரகாண்டத்திலும் உள்ளது என்பார்கள்.
* பூஜை அறையில், பூஜை மேடையில் சுந்தரகாண்டம் புத்தகம் வைத்து பூஜிப்பதும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பூஜையறையில் அமர்ந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது, இரட்டிப்புப் பலன்களை வழங்கும்.
* சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு வேளையும் படிக்கலாம்.
* சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.
* பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சுந்தரகாண்டம் படிக்காமல் இருக்கலாம், தவறில்லை.
* சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.
* சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்துவிட்டு, ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்தால் பாவங்கள் தொலையும். புண்ணியம் பெருகும்.