Published : 10 Sep 2019 09:58 AM
Last Updated : 10 Sep 2019 09:58 AM

அற்புத புதனில் ஆவணி பிரதோஷம்

வி.ராம்ஜி


அற்புதமான புதன் கிழமையில் பிரதோஷம் வருகிறது. ஆவணி மாதத்தின் பிரதோஷத்தன்று மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப்பெறுவீர்கள். வீட்டில் இருந்த தரித்திரம் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.


மாதந்தோறும் அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு முன்னதாக பிரதோஷம் வரும். திரயோதசி திதியில் வருவதுதான் பிரதோஷம். இது, சிவனாருக்கு உரிய அற்புதமான நாள். பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம்.


அதனால்தான், பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையான மாலை வேளையில், சிவபெருமானுக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் என நடைபெறும்.


அப்போது 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சமர்ப்பிப்பது விசேஷம். அதேபோல் சிவனாருக்கு வில்வ இலையால் அலங்கரிப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.


புதன்கிழமையைச் சொல்லும் போது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையான நாளைய தினம் (11.9.19) பிரதோஷம் வருகிறது. ஆவணி மாதத்தின் பிரதோஷம்.


எனவே, நாளைய தினத்தில், மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். செவ்வரளி மாலையும் வில்வமும் அருகம்புல்லும் கொண்டு, நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் சார்த்தி வணங்குங்கள்.


உங்களுக்குத் தெரிந்த தேவார - திருவாசகப் பாடல்களைப் பாடலாம். ருத்ரம் ஜபிக்கலாம். இவை, இன்னும் பலத்தையும் வளத்தையும் தந்தருளும்.


நாளை (11.9.19) பிரதோஷம். மறக்காமல் சிவதரிசனம் செய்யுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x