Last Updated : 30 Jul, 2015 11:54 AM

 

Published : 30 Jul 2015 11:54 AM
Last Updated : 30 Jul 2015 11:54 AM

விவிலிய வழிகாட்டி: பார்வையற்றவனின் பார்வை

எகிப்தியரின் அடிமைத் தளையிலிருந்து மீட்டு, வாக்களிக்கப்பட்ட தேசம் நோக்கி இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்றவர் மோசே. செல்லும் வழியில் சீனாய் மலையில் அவர்களுக்குக் கடவுளிடமிருந்து பத்துக் கட்டளைகளைப் பெற்றுத்தந்தார்.

மோசேயைத் தங்களின் குரு மரபில் முதன்மையானவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள் பிற்காலத்தில் இயேசுவுக்கு தாங்கள் வழிபடும் பரலோகத் தந்தை சக்தியளிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மோசேயை விடவும் இயேசு உயர்ந்தவர் இல்லை என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது. அவர்களது இந்தப் பார்வை கண்கள் இருந்தும் இயேசு வாக்களிக்கப்பட்ட இறைமகன் என்பதைக் காண முடியாத அவர்களது குருட்டுத் தன்மையைக் காட்டியது. அவர்களது கண்களை திறக்க வேண்டும் என்பதற்காகவே பிறவியிலேயே பார்வையற்றவனுக்கு பார்வையைக் கிடைக்கச் செய்தார் இயேசு.

ஒளியாக இருக்கிறேன்

யூதேயாவில் அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்த ஒருவனைக் கண்டார். அப்போது இயேசுவின் சீடர்கள், “ரபீ, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா, இவனுடைய பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இவன் செய்த பாவமும் இல்லை, இவனுடைய பெற்றோர் செய்த பாவமும் இல்லை; கடவுளாகிய பரலோகத் தந்தையின் செயல்கள் இவன் மூலம் வெளிப்படும்படியே இப்படிப் பிறந்திருக்கிறான்.

என்னை அனுப்பியவருடைய செயல்களைப் பகல் வேளையிலேயே நாம் செய்ய வேண்டும்; இரவு வேளை வரப்போகிறது, அப்போது எந்த மனிதனாலும் வேலை செய்ய முடியாது. நான் இந்த உலகத்தில் இருக்கும்வரை, இந்த உலகத்திற்கு ஒளியாக நான் இருக்கிறேன்” என்றார்.

பிறகு தரையில் குணிந்து தன் கைகளில் களிமண்ணை எடுத்தார். அதைத் தன் உமிழ்நீரால் குழைத்து, பார்வையற்ற மனிதனின் கண்கள்மீது பூசினார். பிறகு அவனிடம் “ நீ போய் அருகிலிருக்கும் சீலோவாம் குளத்தில் உன் கண்களைக் கழுவு” என்றார். அவனும் போய், கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தான். ஆனால் அவன் வருவதற்குள் இயேசு அங்கிருந்து அகன்று சென்றார். உலகைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் தனக்கு ஒளிகொடுத்த இயேசுவைத் தேடினான்.

யூதர்களின் அகந்தை

பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்தவன் தற்போது பார்வைபெற்றவனாக மாறியதைக் கண்ட யூதர்கள் அவனைப் பரிசேயர்களிடம் அழைத்துச் சென்றார்கள். இயேசு மண்ணைக் குழைத்து அவனுடைய கண்கள்மீது பூசிய நாள் ஓய்வுநாளாக இருந்தது. அதனால் பரிசேயர்களும், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்” என்று அவனிடம் கேட்டார்கள். அதற்கு அவன், “களிமண்ணை அவர் என் கண்கள்மீது பூசினார்; நான் அதைக் கழுவி, பார்வை பெற்றேன்” என்றான். அவனது சாட்சியைக் கேட்டு கோபம் கொண்ட பரிசேயர்களில் சிலர், “ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காத இயேசு கடவுளிடமிருந்து வந்தவனாக எப்படி இருக்க முடியும்?” என்றார்கள்.

பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்தவன் இப்போது பார்வை பெற்றிருக்கிறான் என்பதை யூத மதத் தலைவர்கள் நம்பவில்லை. அதனால் அவனுடைய பெற்றோரை அழைத்து, “இவன் உங்கள் மகன்தானா? இவன் பார்வை இல்லாமல் பிறந்தான் என்று சொல்கிறீர்கள், இப்போது எப்படிப் பார்வை வந்தது?” என்று கேட்டார்கள். அவனுடைய பெற்றோர், “இவன் எங்களுடைய மகன்தான், பிறவியிலேயே பார்வையற்றவனாகத்தான் இருந்தான். ஆனால், இப்போது இவனுக்கு எப்படிப் பார்வை வந்தது என்று எங்களுக்குத் தெரியாது, யார் இவனுக்குப் பார்வை தந்தது என்றும் எங்களுக்குத் தெரியாது. இவனையே கேளுங்கள். இவன் நன்கு வளர்ந்தவன்தானே. அதனால் இவனே சொல்லட்டும்” என்றார்கள். யூத மதத் தலைவர்களுக்குப் பயந்தே அவனுடைய பெற்றோர் இப்படிச் சொன்னார்கள்.

அதனால் பார்வை பெற்றவனை இரண்டாவது முறையாக அழைத்த அவர்கள் “உண்மையைச் சொல்லிக் கடவுளை மகிமைப்படுத்து; அந்த ஆள் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும், பார்க்க முடியாமல் இருந்த என்னால் இப்போது பார்க்க முடிகிறது. நான் இந்த உலகைக் காண்கிறேன்” என்றான். அப்போது அவர்கள் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? உனக்கு எப்படிப் பார்வை தந்தான்?” என்றுத் துருவிக் கேட்டார்கள். அதற்கு அவன், “நான் ஏற்கெனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்கவில்லை. மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களா என்ன?” என்றான்.

அப்போது அவர்கள் அவனைச் சபித்து, “நீதான் அவனுடைய சீடன், நாங்கள் மோசேயுடைய சீடர்கள்; மோசேயிடம் கடவுள் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும்; ஆனால், அந்த ஆள் எங்கிருந்து வந்திருக்கிறான் என்றே எங்களுக்குத் தெரியாது” என்றார்கள். அதற்கு அந்த மனிதன், “என்ன ஆச்சரியம்!? அவர் எனக்குப் பார்வை தந்திருக்கிறார், அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று தெரியாது என்கிறீர்களே!?” என்று அதிர்ந்தான். மேலும் அவர்களை நோக்கி, “பாவிகளுக்குக் கடவுள் செவிகொடுப்பதில்லை, அவருக்குப் பயந்து அவருடைய சித்தத்தைச் செய்கிறவனுக்கே அவர் செவிகொடுக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

பிறவியிலேயே பார்வையற்றவனுக்கு பார்வை அளித்ததாகச் சரித்திரமே இல்லை. அவர் கடவுளிடமிருந்து வரவில்லையென்றால், அவரால் ஒன்றுமே செய்திருக்க முடியாது” என்று சொன்னான். இயேசுவைப் பற்றிய பார்வை பெற்றவனின் பார்வை அவர்களுக்கு கசப்பாய் இருந்தது. அதற்கு அவர்கள், “முழுக்கமுழுக்கப் பாவத்தில் பிறந்த நீயா எங்களுக்குச் சொல்லித் தருகிறாய்?” என்று கூறி, அவனைத் துரத்தியடித்தார்கள்.

ஒளியைக் கண்டான்

பார்வைபெற்றவனைத் துரத்திவிட்டார்கள் என்ற செய்தி இயேசுவுக்கு வந்துசேர்ந்தது. பிறகு பார்வை பெற்றவனை இயேசு கண்டபோது, “மனித குமாரன்மீது நீ விசுவாசம் வைக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், “ஐயா, அவர் யார் என்று சொல்லுங்கள்; அப்போது நான் விசுவாசம் வைப்பேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ அவரைப் பார்த்திருக்கிறாய்; உன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் நானே அவர்” என்றார். உடனடியாக அவன், “எஜமானே, நான் விசுவாசம் வைக்கிறேன்” என்று சொல்லி அவர்முன் தலைவணங்கினான்.

நீங்கள் பார்வை பெற்றவரா, இல்லை யூதர்களைப்போல் பார்வையிருந்தும் காண முடியாதவர்களாய் இருக்கிறீர்களா? மற்றவர்களுக்கு ஒளியாக வாழக் கற்றுக்கொள்வதே சீடத்துவ வாழ்வு என்பதை இந்த நிகழ்வு நாம் பார்வைக்கு எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x