Published : 09 Sep 2019 03:10 PM
Last Updated : 09 Sep 2019 03:10 PM
வி.ராம்ஜி
பித்ருக்கள் எனப்படும் முன்னோரை வணங்கி வழிபட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த ஜென்மத்தில், இரண்டு வழிபாடுகளை தவறாமல் செய்யவேண்டும். ஒன்று... குலதெய்வ வழிபாடு. இன்னொன்று... பித்ரு வழிபாடு.
மாதந்தோறும் வருகிற அமாவாசையன்று முன்னோரை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிக்கவேண்டும். மொத்தம் ஒருவருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதிலும் முக்கியமாக, தை மாதத்தில் வரும் அமாவாசை, ஆடி மாதத்தில் வரும் அமாவாசை இந்த இரண்டு அமாவாசைகளும் மிக மிக முக்கியமானவை. இந்த அமாவாசைகளில் அதாவது தட்சிணாயன, உத்தராயன புண்ய காலத் தொடக்ககாலத்தில் வருகிற அமாவாசைகளில் முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வதும் தானங்கள் செய்வதும் மகா புண்ணியம்.
தை மற்றும் ஆடி அமாவாசை போலவே, புரட்டாசி அமாவாசையும் மிக உன்னதமானது. மகாளய பட்ச அமாவாசை என்று இதனைச் சொல்லுவார்கள். அதாவது பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் மகாளய பட்சம் எனப்படும். பட்சம் என்றால் 15 என்று அர்த்தம்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை 15.9.19 அன்றில் இருந்து மகாளய பட்சம் தொடங்குகிறது. இந்த 15 நாட்களும் தினமும் தர்ப்பணம் செய்ய வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். இந்த நாட்களில், முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதும் அவர்களை நினைத்து தான தருமங்கள் செய்வதும் புண்ணியங்களைப் பெருக்கவல்லது. நம்மையும் நம் சந்ததியையும் செம்மையாகவும் சிறப்பாகவும் வாழச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
எனவே, வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடங்குகிற மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோரை ஆராதிப்போம். அவர்களை நினைத்து தானங்கள் செய்வோம்.