Published : 09 Sep 2019 10:19 AM
Last Updated : 09 Sep 2019 10:19 AM

தரித்திரத்தின் அறிகுறிகள்... உஷார்! 

வி.ராம்ஜி


’என்னடா இது. ஒரே தரித்திரமா இருக்கு’ என்று அலுத்துக் கொள்வோம். ’எவ்ளோ சம்பாதிச்சாலும், துடைச்செடுத்த மாதிரி காசு இருக்கமாட்டேங்குது’ என்று புலம்புவோம். ‘எப்பப் பாரு இல்ல இல்லன்னு தரித்திரம் பிடிச்ச மாதிரி’ என்று சீறுவோம்.
உண்மையில் அமங்கலச் சொற்கள் சொல்லும்போது, அது அமங்கலமாகவே உட்கார்ந்துகொண்டு இம்சை பண்ணும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


வீட்டில் உள்ள தரித்திரத்தின் அறிகுறிகள் என்று சிலவற்றைச் சொல்லுகிறார்கள்.


வீட்டில் உள்ள ஸிங்க்கில், கழுவப்படாத எச்சில் பாத்திரங்கள் நீண்டநேரமாக அப்படியே இருந்தால், அது தரித்திரத்தின் அறிகுறி. எனவே அப்படி பாத்திரங்களை வைக்காமல், உடனுக்குடன் அலம்பிவிடுங்கள்.


ரேஷன் கார்டில் குடும்பத்தலைவன் என்று ஆணின் பெயர் இருந்தாலும், ஒரு வீட்டுக்கு அரசிதான் உண்டு. இல்லத்தரசிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது சாஸ்திரம். எனவே, பூஜையறையில், பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும்.


வீட்டில், எப்போதும் தலைமுடி தரையில் இருந்துகொண்டே இருப்பது நல்ல அறிகுறி அல்ல. முடி உதிராமல் இருக்கவும் வீட்டுக்குள் தலைவாராமல் இருக்கவும் காற்றில் வெளியிலிருந்து முடி உள்ளே வராமல் இருக்கவும் நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்.


ஒட்டடைகள், தரித்திரத்தின் மிக முக்கியமான அறிகுறி. ஒட்டடை அடித்துவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், அடுத்தடுத்த நாளில் ஒட்டடை வரத்தான் செய்யும். எனவே, ஒட்டடைகள் வரவர, உடனே அடித்து நீக்கிவிடுவது நல்லது. ஒட்டடையை நீக்குவதில், அலுத்துக்கொள்ளாதீர்கள்.


மாலை வேளையில், விளக்கேற்றிய பிறகு, வீட்டைப் பெருக்குவதும் துடைத்து மெழுகுவதும் கூடவே கூடாது. அதேபோல், எவ்வளவு அயர்ச்சியாக இருந்தாலும் மாலை வேளையில், தூங்கக் கூடாது.


வீட்டுக் குழாய்களில், தண்ணீர் சொட்டிக்கொண்டே இருப்பது நல்லதல்ல. எனவே குழாயை உடனடியாக சரிசெய்து கொள்ளவேண்டும்.
பால், அரிசி, உப்பு, சர்க்கரை முதலானவை முழுக்க காலியான பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்றிருக்கக் கூடாது. உப்பு, அரிசி, சர்க்கரை ஆகியவையெல்லாம் எப்போதும் வீட்டில் அந்தந்தப் பாத்திரங்களில் நிறைந்திருக்கவேண்டும்.


இல்லை, நடக்காது, முடியாது, நாசமாப் போச்சு, என்ன எழவுடா இது என்பது போன்ற அமங்கலச் சொற்களை சொல்லவே சொல்லாதீர்கள். அதுவும் குறிப்பாக, வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டோ, நடுஹாலில் இருந்துகொண்டோ சொல்லாதீர்கள். அந்தச் சொற்கள் உதிர்ந்து காற்றில் கலந்த அடுத்த நொடியே, மூதேவி நம் வீட்டுக்குள் குடிபுகுந்துகொள்வாளாம்!


ஐம்பது சதவிகிதம் நம் ஊதாரித்தனமான செலவுகளாலும் மீதமுள்ள ஐம்பது சதவிகிதம் இதுமாதிரியான விஷயங்களாலும் ஒரு வீட்டில் தரித்திரம் வந்து உட்கார்ந்துகொள்கிறது என்கிறது சாஸ்திரம். கவனமாக இருங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x