Published : 05 Sep 2019 03:19 PM
Last Updated : 05 Sep 2019 03:19 PM

ஆவணி வெள்ளியில் திருஷ்டி கழியுங்கள்;  தடைகள் அகலும்; வெற்றி நிச்சயம்! 


வி.ராம்ஜி


ஆவணி வெள்ளிக்கிழமையில், வீட்டில் உள்ளவர்களை நடுஹாலில் அமரவைத்து, திருஷ்டி சுற்றிப் போடுங்கள். இல்லத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


பொதுவாகவே, வீட்டில் வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை முதலான முக்கிய நாட்களிலும் திருஷ்டி சுற்றிப் போடுவது வழக்கம். இதை திருஷ்டி கழித்தல், கண்ணேறு கழித்தல் என்றெல்லாம் சொல்லுவார்கள்.


இப்படி, வெள்ளிக்கிழமைகளில், அமாவாசை முதலான முக்கிய நாட்களில், அந்தி சாயும் நேரத்தில், இருள் கவிந்த நிலையில், வீட்டு நடுஹாலில் வீட்டில் உள்ள அங்கத்தினர்களை அமரவைத்து, வீட்டுக்குப் பெரியவர்கள் திருஷ்டி சுற்றுவார்கள். தேங்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிப்பது நல்லது. அதேபோல, பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி வைத்து, திருஷ்டி சுற்றிப் போடுவதும் பிறகு அந்தத் தேங்காயையும் பூசணிக்காயையும் தெருமுனையில் அல்லது முச்சந்தியில் உடைத்து, வேண்டிக்கொள்வது ரொம்பவே நல்லது. திருஷ்டி கழியும். காரியத்தடைகள் அகலும் என்கிறார்கள்.


ஆவணி மாதத்தின் வெள்ளிக்கிழமை என்பது, திருஷ்டி கழிப்பதற்கு உகந்த அற்புதமான நாள். ஆவணி மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமைகளில், தொடர்ந்து வீட்டில் திருஷ்டி கழித்தால், ’யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல. எல்லாத்துலயும் தடங்கலாவே இருக்கு’ என்று கலங்கி வருந்துவோர் அதுவரை இருந்த இன்னல்களில் இருந்து தடைகளில் இருந்தும் விடுபடுவார்கள். இனி காரியம் அனைத்தும் வீரியமாகும்; ஜெயத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம்.


நாளைய தினம் ஆவணி மாத வெள்ளிக்கிழமை. இந்த நாளில், மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். ஹாலின் நடுவே எல்லோரையும் கிழக்குப் பார்த்து உட்காரச் சொல்லுங்கள். அவர்கள் அமர்ந்த பிறகு, தேங்காயில் சூடமேற்றி திருஷ்டி கழியுங்கள். எலுமிச்சையில் சூடமேற்றி திருஷ்டி கழிப்பதும் தீயசக்திகளை விரட்டியடிக்கும்.


இதனால், தடைகள் அகலும். காரியம் அனைத்தும் வெற்றியாகும் என்று ஆச்சார்யர்கள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x