செய்திப்பிரிவு

Published : 04 Sep 2019 08:11 am

Updated : : 04 Sep 2019 08:12 am

 

திருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம்: செம்பவள மேனியராக பக்தர்களுக்கு காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர்

ganesh-chathurthi
திருப்புறம்பியத்தில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய நடைபெற்ற தேன் அபிஷேகத்தின்போது செம்பவள மேனியராக காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர்.

கும்பகோணம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேன் அபிஷேகம் நடைபெற்றது.

திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் தேனபிஷேக பெருமான் என்று அழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு விடிய விடிய தேன் அபிஷேகம் நடைபெற்றது.

நால்வரால் பாடல் பெற்ற, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் உள்ள பிரளயம் காத்த விநாயகர் நத்தைக் கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகிய கடல் பொருட்களால் உருவான மேனியைக் கொண்டவர்.

வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேன் அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது. இக்கோயிலில் 35-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி மாலை 5 மணிக்கு தேன் அபிஷேகம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அபிஷேகத்துக்காக தேன் வழங்கினர். தேன் அபிஷேகம் நேற்று அதிகாலை 5 மணி வரை விடிய விடிய நடைபெற்றது.


அபிஷேகத்தின்போது, விநாயகர் மீது ஊற்றப்படும் தேன் முழுவதும் அவரது திருமேனியின் உள்ளே உறிஞ்சப்பட்டு, சிலை சிறிது சிறிதாக தேன் நிறத்துக்கு மாறியது. நேற்று அதிகாலை தேன் அபிஷேகம் நிறைவடைந்தபோது, பிரளயம் காத்த விநாயகர் செம்பவள மேனியராக காட்சியளித்தார். இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தேன் அபிஷேகம்பிரளயம் காத்த விநாயகர்Ganesh chathurthi
Popular Articles

You May Like

More From This Category

More From this Author