அருகம்புல் மகிமை - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்

அருகம்புல் மகிமை - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்
Updated on
1 min read

வி.ராம்ஜி


பிள்ளையார் என்றாலே அவருக்கு உகந்தது அருகம்புல் என்கிறது விநாயக புராணம்.


எமனின் மைந்தன் அனலாசுரன். ஒருநாள்... இந்திரன் முதலான தேவாதிதேவர்களை அப்படியே விழுங்கிவிடத் துரத்தினான். அப்போது தேவர்கள் எல்லோரும் ஓடிச்சென்று அடைக்கலமானது, விநாயகரிடம்.


இதையடுத்து, அனலாசுரனுடன் போரிட்டு, அவனை அழித்தொழித்தார் விநாயகக் கடவுள். அதாவது, அந்த அரக்கனை அப்படியே விழுங்கினார். அவன்... அனலாசுரனல்லவா. அதனால் கணபதியின் வயிற்றுக்குள் அனலாகத் தகித்தது.


இதன் பின்னர், அந்த வெப்பத்தைப் போக்க, ஒருபக்கம் தன் அமுத கிரணங்களால் அமுதமூற்றி குளிர்விக்க முயன்றான். சக்தி, புத்தி இருவரும் தங்களின் குளிர்மேனியால் ஒத்தடம் கொடுத்து முயன்றார்கள்.


மகாவிஷ்ணு, தாமரை மலர்கள் கொண்டு குளிர்விக்க முயன்றார். வருண பகவான் மழையெனப் பொழிந்து அபிஷேகித்தார். இப்படியாக பலரும் பலவிதமான முறையில் குளிர்வித்தார்கள்.


நிறைவாக, முனிவர் பெருமக்களும் சித்தபுருஷர்களும் அருகம்புல்லை, கட்டுக்கட்டாக எடுத்துவந்து அவர் மீது சாற்றினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அருகம்புல்லை எடுத்து அர்ச்சித்தார்கள். அனலாசுரனால் உண்டான வெப்பம் தணிந்தது. ஆனைமுகத்தானின் தொந்தி குளிர்ந்தது.
விநாயகரை, முழுமுதற் கடவுள் என்கிறது புராணம். உலகின் முதலில் தோன்றிய உயிர் அருகம்புல் என்றும் தெரிவிக்கிறது. பலப்பல பிறவிகளைக் கடந்த ஆன்மாக்கள், மழை வழியே வந்து, அருகம்புல்லின் நுனியில் துளிர்நீராக, துளி நீராக வந்து உட்கார்ந்து கொள்கின்றனவாம்.
அருகம்புல்லை பசுக்கள் சாப்பிடுகின்றன. பிறகு அது எருவாகிறது. உரமாகிறது. பச்சைப்பயிர்களுக்குள் செல்கிறது. உணவாகிறது. உணவாக இருந்து உயிர்நிலைக்குச் செல்கிறது. உயிரணுவாகிறது. பிறகு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் சென்று கருவாகி, சிசுவாகி, குழந்தையாகி, மனிதப் பிறப்பாகிறது.


ஆக, இத்தனை பெருமைக்கு உரியதாகத் திகழ்கிறது அருகம்புல்.


இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில் (செப்டம்பர் 2) முழுமுதற் கடவுளுக்கு, அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள். அருளும்பொருளும் அள்ளித்தந்து அருளுவார். உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் மொத்தக் குடும்பத்தையும் குளிரப்பண்ணுவார், விக்ன கணபதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in