Published : 30 Aug 2019 09:59 AM
Last Updated : 30 Aug 2019 09:59 AM

எளிய விரதம்... இப்படித்தான்! - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்

வி.ராம்ஜி

நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது விநாயக சதுர்த்தி பண்டிகை. இந்தநாளில், விரதம் இருந்து விநாயகப் பெருமானை மனதார வழிபடுவோம். நம் விக்னங்களையெல்லாம் தீர்த்தருள்வான் தொந்தி கணபதி.


சரி... இந்தநாளில் விரதம் மேற்கொள்வது எப்படி?


ஆவணி மாத அமாவாசைக்குப் பிறகு நான்காம் நாள் வருவதுதான் விநாயக சதுர்த்தி.


அன்றைய நாளில், அதிகாலையில் எழுந்து குளித்துவிடவேண்டும். முன்னதாக வீட்டை நன்றாகச் சுத்தம் செய்யவேண்டும். வாசலில் மாவிலையைத் தோரணமாகக் கட்ட வேண்டும். மாவிலை என்பது மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இதேபோல், பூஜையறையை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். முந்தைய நாளிலேயே, விளக்கு, ஊதுபத்தி ஸ்டாண்ட் முதலானவற்றை நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.


பூஜையறையில், நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மணையில் கோலமிட்டுக் கொள்ளவேண்டும். கோலத்தின் மேல் இலையை வைத்துக் கொள்ளலாம். இலையின் நுனியை வடக்குப் பார்த்தபடி வைப்பது சிறப்பு. அந்த இலையின் மேல் பச்சரிசியை பரப்பி வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த பச்சரிசிக்கு நடுவே, களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வைக்கவேண்டும். பிள்ளையாருக்கு குடைகள் விற்கின்றன. அந்த பேப்பர் குடைகளை வைத்து அழகுப்படுத்தலாம்.


சரி... விதம்விதமாக, ரகம்ரகமாக பிள்ளையார் செய்யப்பட்டிருக்கும்போது, களிமண் பிள்ளையார் எதற்காக?


பூமியில் இருந்து கிடைத்தது அனைத்தும் பூமிக்கே செல்லவேண்டும் என்கிற ஐதீகப்படி, அதை உணர்த்துவதற்காகத்தான் களிமண் பிள்ளையார் வழிபாடு. எனவே களி மண் பிள்ளையார் வைத்துக்கொள்ளவேண்டும்.


பிறகு பிள்ளையாருக்கு பல வகையான மலர்கள் சூட்டி அழகுப்படுத்தலாம். பலவகைப் பூக்கள் கொண்ட கதம்பம், வெள்ளெருக்கம்பூ, அருகம்புல், மல்லிகைப்பூ, சாமந்திப்பூ என பல வகைப் பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.


அடுத்து... பழங்கள். பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்ய பல வகையான பழங்களை வைத்துக்கொள்ளவேண்டும். பழங்களுக்கு அடுத்ததாக, விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகத்தை, கொழுக்கட்டையை சமைத்து நைவேத்தியமாக வைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய், வெல்லச்சூரணம் கொண்டு ஒரு கொழுக்கட்டை. இன்னொன்று காரக் கொழுக்கட்டை. உப்புக்கொழுக்கட்டை என்றும் பருப்புக் கொழுக்கட்டை என்றும் சொல்லுவார்கள்.


இப்போது எல்லாம் தயாராகிவிட்டது. விநாயகர் துதி பாடலாம். கணபதியின் திருநாமங்களைச் சொல்லலாம். விநாயகர் அகவல் படித்து வணங்கலாம்.


அதிகாலையில் எழுந்து, உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல், பூஜைகளை முடித்து, கணபதியை நமஸ்கரித்துவிட்டு, பிறகு சாப்பிட்டு,விரதத்தை நிறைவு செய்யலாம்.


முறையே விரதம் அனுஷ்டித்து, கணபதியை ஆராதித்து வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் நலமும் தந்து அருளுவார் ஆனைமுகத்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x