மண் பிள்ளையார் மகிமை! - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்

மண் பிள்ளையார் மகிமை! - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்
Updated on
1 min read

வி.ராம்ஜி


பிள்ளையார்... எல்லோருக்கும் விருப்பமானவர். இவரை வேண்டிக்கொள்வதும் வழிபடுவதும் விரதம் மேற்கொள்வதும் என மிக மிக எளிமையானவை. எந்த ஹோமம் நடத்துவதாக இருந்தாலும் முதலில், கணபதியை தொழுதுவிட்டுத்தான், அடுத்தடுத்த ஹோமங்களும் பூஜைகளும் வழிபாடுகளும் செய்வார்கள்.


ஒரேயொரு அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்கு சார்த்தினால் போதும்... அதில் குளிர்ந்து போய், நம்மைக் குளிர்விப்பார் பிள்ளையார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


அவ்வளவு ஏன்... மனதில் பிள்ளையாரைக் குவித்து சிந்தித்தபடி, கொஞ்சம் மஞ்சள் எடுத்துக் குவித்து வைத்தாலே போதும்... அதில் தொந்தி கணபதி அழகாக வந்து உட்கார்ந்து அரசாட்சி செய்வார் என்பது ஐதீகம்.


எத்தனை உயரமாக, வெள்ளி, வெண்கலம் என சிலைகள் இருந்தாலும் விநாயக சதுர்த்தி நாளில், மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வைத்து பூஜை செய்வதே மரபு.


இந்த மண் பிள்ளையாரை யார் வேண்டுமானாலும் செய்து பூஜிக்க முடியும். மண் பிள்ளையாருக்கு ஆகமங்களும் இல்லை; விதிகளும் கிடையாது.


குடிசையில் இருப்பவர் முதல் கோடீஸ்வரர்கள் வரை எல்லார் வீடுகளிலும், விநாயக சதுர்த்தியில் மண் பிள்ளையார்தான் வைத்து பூஜைகள் நடந்தேறும். அவருக்குத்தான் பூஜைகள், வழிபாடுகள், ஆராதனைகள் என அமர்க்களப்படும்.


அவருக்கு சார்த்தப்படும் அருகம்புல்லும் வெள்ளெருக்கம்பூவும் இன்றைக்கும் கிராமங்களில் எல்லா இடங்களிலும் இருப்பதைப் பார்க்கலாம். நகரங்களில்தான் காசு கொடுத்து வாங்குகிறோம். ஆக கணபதிக்கு அணிவிக்கப்படும் அருகம்புல்லும், வெள்ளெருக்கம்பூவும் எளிமையானவை. ஈஸியாகக் கிடைக்கக் கூடியவை.


மண் பிள்ளையாரைக் கொண்டு பூஜை செய்து, பிறகு அதை விசர்ஜனம் செய்வோம். அதாவது, மண்... பிள்ளையாராக இருந்து, மீண்டும் மண்ணாவது போல், நமக்கு வருகிற துன்பங்களும் மண்ணோடு மண்ணாகிப் போகும். அதற்கு பிள்ளையார் நமக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து அருள்வார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in