Published : 29 Aug 2019 05:40 PM
Last Updated : 29 Aug 2019 05:40 PM

அல்லல் போம், வல்வினை போம்! - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்


வி.ராம்ஜி


உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்கிற ஆசையும் ஏக்கமும் யாருக்குத்தான் இல்லை. வாழ்வில், கஷ்டமான நிலையில் இருந்து உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும். கல்வி, உத்தியோகம், அந்தஸ்து,காசு-பணம், வீடு - வாசல் என உயர வேண்டும் என்பதுதானே நம் ஆசை; அதற்குத்தானே இத்தனை போராட்டமும் உழைப்பும்!


ஆக, வாழ்வில், உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்கிற நம் எண்ணங்களை ஈடேற்றித் தந்தருள்வார் பிள்ளையாரப்பன்.
நம் விக்னங்களையெல்லாம் களைந்து விடுவார் கணபதி. துக்கங்களையும் தீர்த்துத் தருவார் தும்பிக்கையான்.


தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு, வாழ்வின் அடுத்தடுத்த வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு என நாம் வேண்டுவதையெல்லாம் கிடைக்கச் செய்வார் ஆனைமுகத்தான்!


விநாயக சதுர்த்தி நன்னாளில், அவருக்கு அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கம்பூ மாலையும் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள்.
முக்கியமாக, விவேக சிந்தாமணியில் உள்ள இந்தப் பாடலை மனனம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.


விவேக சிந்தாமணியில் உள்ள அந்தப் பாடல் :


அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் - நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்.


மலையே சிவமெனத் திகழும் அருணை எனப்படும் திருவண்ணாமலை கோபுரத்தில் கொலுவிருக்கும் கணபதியைக் குறித்துச் சொல்லப்படும் பாடல் இது.


நம் பிறவித் துன்பம் முதலான துன்பங்களும் துயரங்களும் கவலைகளும் வேதனைகளும் விலகும். இந்தப் பாடலை பாடி விநாயகச் சதுர்த்தியைக் கொண்டாடுங்கள். விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x