

வி.ராம்ஜி
கிருஷ்ணருக்கு உரிய ஜயந்தித் திருநாள் இன்று. மேலும் முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய கார்த்திகை விரத நாளும் கூட. எனவே, இந்தநாளில், முருகப்பெருமானை வழிபடுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி என்பது பகவான் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரத் திருநாள். ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜயந்தி, சிறப்புற கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், கிருஷ்ணர் பாதம் வரைந்து, மாவிலைத் தோரணம் கட்டி, கிருஷ்ணருக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த பட்சணங்களைப் படைத்து வேண்டிக்கொள்வது வழக்கம்.
அதேபோல், தேய்பிறை அஷ்டமி என்பது பைரவரை வணங்குவதற்கு உரிய நாள். சிவாலயம் சென்று, பைரவரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொண்டால், எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும்.
இன்று கார்த்திகை விரத நாள். எனவே, முருகப்பெருமானை நினைத்து பாராயணம் செய்வதும் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயம் சென்று வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.
செவ்வரளி மாலை சார்த்தி முருகனை வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகியுங்கள். நினைத்த காரியத்தை நடத்தித் தந்தருள்வார் கந்தபெருமான்.