

வி.ராம்ஜி
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் அவலும் ஒன்று. அவல் மூலம் பாயசம் செய்யலாம். அவல் உப்புமாவும் சிறப்புதான்.
நாளைய தினம் கிருஷ்ண ஜயந்தி (23.8.19). இந்தநாளில், கிருஷ்ணருக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில் அவல் பாயசமும் இருக்கவேண்டும் என விரும்புகிறீர்களா?
இதோ... அவல் பாயசம் செய்முறை... இப்படித்தான்!
செய்முறை :
முதலில் கனமான வாணலி ஒன்றில், கொஞ்சம் நெய் விட்டுக்கொள்ளவேண்டும்.
பிறகு அந்த நெய்யில், ஏழு முதல் பத்து வரை முந்திரிப்பருப்பை இட்டு, வறுக்கவேண்டும். பொன்னிறமாக முந்திரிப்பருப்பு வரும் போது எடுத்துவிடவேண்டும்.
இப்போது, போதுமான அளவுக்கு (இரண்டு அல்லது மூன்று கப்) அவல் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வாணலியில் நெய் வாசம் வீசிக்கொண்டிருக்கும் அல்லவா. அத்துடன் அவலைப் போட்டு, வறுக்கவேண்டும்.
நன்றாக வறுபட்ட பிறகு, அந்த இரண்டு கப் பால் விடுங்கள். இப்போது வெல்லத்தை இடித்து, கரைசலாக தயாராக வைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தின் அளவு போதுமான அளவாக, கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இப்போது பாலில் அவலையும் சேருங்கள். அத்துடன் வெல்லக் கரைசலையும் சேருங்கள். கொதிபடும் வரை காத்திருங்கள். கொதிக்க தொடங்கிய ஒருநிமிடத்திலேயே வறுத்த முந்திரிப்பருப்பை அத்துடன் சேருங்கள்.
இதையடுத்து, இடித்து வைத்திருக்கும் ஏலக்காயைச் சேர்த்துவிட்டு, நன்றாகக் கிளறிவிட்டு இறக்கினால், சூடான, சுவையான, அருமையான, அற்புதமான அவல் பாயசம் ரெடி!