

வி.ராம்ஜி
பகவான் கிருஷ்ணரின் ஜன்ம நட்சத்திரத் திருநாள் நாளைய தினம் (23.8.19). அதேபோல், தேய்பிறை அஷ்டமியான நாளைய தினத்தில் பைரவ வழிபாடு செய்ய மறந்துவிடாதீர்கள்.
ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில், திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது புராணம். நாளை வெள்ளிக்கிழமை, ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி. ரோகிணி நட்சத்திர நாள். எனவே பகவான் கிருஷ்ணர் அவதரித்த நன்னாள், கிருஷ்ண ஜயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது.
இந்தநாளில், கிருஷ்ணரை ஆராதித்து, அவரின் திருப்பாதம் வரைந்து, நம் வீட்டுக்கு அழைத்து, பூஜைகள் செய்யவேண்டும் என்பது வழக்கம். அவருக்குப் பிடித்தமான தயிர், வெண்ணெய் முதலானவற்றைக் கொண்டும் அதன் மூலம் தயாரிக்கும் பட்சணங்கள் மற்றும் உணவைக் கொண்டும் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும்.
சீடை, முறுக்கு, அதிரசம், தட்டை முதலான பட்சணங்களைக் கொண்டு நைவேத்தியம் செய்து வழிபடலாம். அதேபோல், அவல் பாயசம், அவல் உப்புமா முதலானவற்றையும் நைவேத்தியத்தில் சேர்ப்பது மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
எனவே, கிருஷ்ண ஜயந்தி நாளான 23.8.19 வெள்ளிக்கிழமை பகவான் கிருஷ்ணரை மனதாரப் பிரார்த்திப்போம்.
அதேபோல், தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாள். இந்தநாளில், பைரவ வழிபாடு செய்வது, விசேஷம்.
நம் எதிர்ப்புகளையெல்லாம் தெறிக்கச் செய்வார் பைரவர். நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகளையெல்லாம் விரட்டியருள்வார்.
நினைத்த காரியத்தில் துணையிருப்பார். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து விடுவித்துக் காத்தருள்வார் பைரவர்.
செவ்வரளி மாலை சார்த்தி பைரவரை வேண்டுங்கள். முடிந்தால், தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வாழ்க்கை வளமாகும். எதிர்காலம் இன்னும் இன்னும் சிறக்கும். குடும்பத்தின் குழப்பங்கள் யாவும் நீங்கி, தெளிவுடனும் திடத்துடனும் வாழ்வீர்கள் என்பது உறுதி.