Published : 21 Aug 2019 01:08 PM
Last Updated : 21 Aug 2019 01:08 PM

கிருஷ்ணர் பாதம் ஏன்? - கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷல்

வி.ராம்ஜி


கிருஷ்ண ஜயந்தி அன்று, வீடுகளில் வாசலில் இருந்து பூஜையறை வரை, மாக்கோலத்தில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.


கிருஷ்ணர் பாதம் ஏன் வரையவேண்டும் தெரியுமா?


கிருஷ்ண ஜயந்தி என்பது கிருஷ்ணரின் அவதார நன்னாள். ஆவணி மாதத்தில், தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திரத்தில், பகவான் கிருஷ்ணரின் திரு அவதாரம் நிகழ்ந்தது எனத் தெரிவிக்கிறது புராணம்.


எனவே அந்தநாளில், நம் வீடுகளில் கிருஷ்ண ஜயந்தி, கிருஷ்ணரின் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், வீட்டை சுத்தப்படுத்தி, பூஜையறையை சுத்தப்படுத்தி, பூஜைக்குத் தயாராக வேண்டும்.


மாவிலை என்பது மகாலக்ஷ்மியின் அம்சம். எனவே வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வழக்கம். அதேபோல், பால், வெண்ணெய், தயிர் கொண்டு அன்னம் மற்றும் நைவேத்தியங்கள் தயாரிப்பதும் நடைமுறையில் உள்ளது. அதாவது, கிருஷ்ணருக்குப் பிடித்தவற்றைக் கொண்டே நைவேத்தியம் செய்யப்படுகிறது.


சரி... இந்தத் தருணத்தில், கிருஷ்ண ஜயந்தி பண்டிகையன்று, வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைவது ஏன்?


குழந்தை கிருஷ்ணர், இந்த வீடு அந்த வீடு என்று பாரபட்சமெல்லாம் பார்க்கமாட்டாராம். யார் வீட்டுக்குள்ளாவது உறியில் வைத்துள்ள வெண்ணெய்யை கல்லால் அடித்து, அந்த வெண்ணையைச் சாப்பிட்டுவிடுவாராம். அப்படி அவர் சாப்பிடுவதற்காக உடைக்கப்பட்ட வெண்ணெய் உறியில் இருந்து, வெண்ணெயெல்லாம் தரையில் சிந்தியிருக்கும். பாலன் கிருஷ்ணன், அதையெல்லாம் மிதித்துக் கொண்டு, வெண்ணெய்யை வாயில் திணித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வருவார். கண்ணனின் பாத அச்சு, அப்படியே பதிந்திருக்கும்.


அந்த உறியை உடைத்து வெண்ணெயைத் திருடியது கண்ணனே என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஆனால், கண்ணனின் குறும்புகளையும் சேட்டைகளையும் கோபியர் உட்பட எல்லோருமே ரசித்தார்கள்.


பகவானின் பிறப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஆவணி தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திர வேளையில், வீடுகளில் கிருஷ்ண ஜயந்தியைக் கொண்டாடத் தயாராவார்கள் பக்தர்கள். அப்போது, பச்சரிசியை அரைத்து ஊறவைப்பார்கள். அதில் லேசாக தண்ணீர் விட்டுக் கலந்து விடுவார்கள்.


வீட்டையெல்லாம் சுத்தம் செய்த பிறகு, வாசலில் மாவிலைத் தோரணம் கட்டிய பின்னர், கரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவால், கிருஷ்ணர் பாதம் வரைவார்கள். ‘சின்னச்சின்ன காலெடுத்து அடிமேல் அடியெடுத்து, சின்னக்கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்?’ என்று கவியரசு கண்ணதாசன் கூட பாடல் எழுதியிருப்பார். சின்னஞ்சிறிய குழந்தையின் பாதம் போல், கிருஷ்ணர் பாதம் வரைவார்கள். ‘எனக்குத் தெரியாதே’ என்பவர்கள் வருந்தத் தேவையில்லை. கோலத்தை மோதிர விரலில் எடுத்துக்கொண்டு, ‘8’ போல போட்டுக்கொள்ளுங்கள். பிறகு 8க்கு மேலே சின்னச்சின்னதாக நான்கு பொட்டு வையுங்கள். ஐந்தாவதாக கொஞ்சம் பெரிய பொட்டு வையுங்கள். சின்ன பொட்டு நான்கு விரல்கள். பெரிய பொட்டு கட்டைவிரல். அவ்வளவுதான். பார்ப்பதற்கு, குழந்தையின் பாதம் போலவே இருக்கும்.


அதாவது, கிருஷ்ண ஜயந்தித் திருநாளன்று, எவர் வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து பூஜை செய்யப்படுகிறதோ... அவர்களின் வீடுகளுக்கு பகவான் கிருஷ்ணர் வந்து, சகல சுபிட்சங்களையும் தந்தருள்கிறார் என்பதாக ஐதீகம்.


வருகிற 23.8.19 வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜயந்தி. மாவிலைத் தோரணம் கட்டி, வாசல் தொடங்கி பூஜையறை வரை, கிருஷ்ணர் பாதம் வரைந்து, பூஜை செய்யுங்கள். பிள்ளை இல்லாத வீடுகளுக்கு குழந்தைச் செல்வம் தந்தருள்வான் கோபாலன். வீட்டின் தரித்திர நிலையையே மாற்றி, சகல ஐஸ்வர்யங்களையும் தருவான்; தருவதற்காகவே வருவான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x