கிருஷ்ண கிருஷ்ணா கிருஷ்ணா! - கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷல்

கிருஷ்ண கிருஷ்ணா கிருஷ்ணா! - கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷல்
Updated on
1 min read

வி.ராம்ஜி


வருகிற 23.8.19 வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜயந்தித் திருநாள். பக்தர்கள், கிருஷ்ணரை நினைத்து விமரிசையாகக் கொண்டாடும் முக்கியமான இந்தப் பண்டிகையின் போது, என்ன செய்ய வேண்டும், எவ்விதம் வழிபடவேண்டும் என்பதைப் பார்ப்போம்.


திருமாலின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். ஆவணி மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை அஷ்டமியில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது புராணம். எனவே அதுவே அவரின் ஜயந்தித் திருநாளாக, அவதார நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது.


கிருஷ்ண ஜயந்தி நாளில், வீட்டை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்கவேண்டும். வாசலில் இருந்து பூஜையறை வரை, கிருஷ்ணர் பாதம் வரைந்து கொள்ளவேண்டும். இதனை, மாக்கோலத்தில், அதாவது பச்சரிசி மாவு அரைத்து, அதில் தண்ணீர் கலந்து வரையவேண்டும்.


கிருஷ்ணருக்குப் பிடித்த பட்சணங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். அன்றைய தினம் கிருஷ்ணரை நினைத்து விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள்.


அதாவது, காலையில் இருந்தே விரதம் மேற்கொள்வார்கள். திரவ உணவு எடுத்துக்கொள்வார்கள். பாலும் பழமும் மட்டும் சாப்பிடுவார்கள். பிறகு, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்துகொண்டிருப்பார்கள். பகவத் கீதை பாராயணம் மேற்கொள்வார்கள். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், உடலை வருத்திக் கொண்டு விரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


விரதம் மேற்கொள்வோர், மாலையில் பூஜைகள் முடிந்த பிறகு, இரவில் நைவேத்தியங்களை சாப்பிட்டுவிட்டு, மறுநாள் காலையில் குளித்து, பூஜை முடித்து, விரதத்தை நிறைவு செய்வார்கள்.


‘என்னை நோக்கி நீங்கள் ஓரடி எடுத்துவைத்தால், நான் உங்களை நோக்கி பத்தடி எடுத்துவைத்து உங்களைத் தேடி வருவேன்’ என அருளியுள்ளார் பகவான் கிருஷ்ண பரமாத்மா.


எனவே, கிருஷ்ண ஜயந்தி நன்னாளில், ‘கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா’ என்று கிருஷ்ண நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். கிருஷ்ணரின் பேரருளைப் பெறுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in