Published : 09 Aug 2019 10:29 AM
Last Updated : 09 Aug 2019 10:29 AM

ஆடி வெள்ளி... வந்தாள் வரலட்சுமி!  - வாசலில் விளக்கேற்றினால் வாழ்வில் ஒளி! 

வி.ராம்ஜி

ஆடி வெள்ளியில்... வரலட்சுமி விரதநாளில், வீட்டில் வரலட்சுமி பூஜை செய்யுங்கள். மாலையில், அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அம்மனை தரிசியுங்கள். வீட்டு பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றி வையுங்கள். கண் திருஷ்டி கழியும்.

ஆடி வெள்ளிக்கிழமை. அதுமட்டுமா? வரலட்சுமி பூஜை. எனவே, காலையில் இருந்து, வரலட்சுமியை கலசத்தில் ஆவாஹனம் செய்து அழைத்தல், கன்யாப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்குதல், சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் முதலானவை வழங்குதல் என்று செய்வது ரொம்பவே நல்லது.

வரலட்சுமியை எவரொருவர் சிரத்தையுடன் செய்கிறாரோ, அவரின் தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்வாள் மகாலக்ஷ்மி. அந்த வீட்டில், பெண்களின் கண்ணியத்துக்குக் குறைவில்லாத நிலையை உருவாக்குவாள். ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு உதவுவாள். கடன் தொல்லையில் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் மீட்டெடுப்பாள்.

சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கொழுக்கட்டை என நைவேத்தியங்கள் செய்து மகாலக்ஷ்மியை வேண்டுங்கள். உங்கள் வாழ்க்கையையே இனிக்கச் செய்வாள் தேவி.

அதுமட்டுமா? மாலையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசியுங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் செய்து, அனைவருக்கும் வழங்குங்கள். செவ்வரளி மலர் சார்த்துங்கள்.

மாலையில் வீட்டில், பூஜையறையில் விளக்கேற்றுங்கள். சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில், வெள்ளியால் ஆன விளக்கில் தீபமேற்றுவது இன்னும் சிறப்பு. வீட்டு நிலைவாசற்படியில், இன்னொரு விளக்கேற்றுங்கள். அது, அகல்விளக்காகவும் இருக்கலாம். அந்த ஒளியில் உறைந்திருக்கும் மகாசக்தியானது, மகாலக்ஷ்மியை நம் வீடு தேடி அழைத்து வரும் என்பது ஐதீகம்.

இதனால், இருள் படர்ந்த உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றித் தந்தருள்வாள் தேவி என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x