பேதம் துறந்த ரிஷி
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி ஜெயந்தி ஜூலை 4
சுகா என்ற வடமொழிச் சொல்லுக்கு கிளி என்று பொருள். அதனால் அவருக்குப் பெயர் சுகர். கிளி முகம் கொண்ட மகரிஷி ஸ்ரீ சுகப் பிரம்ம ரிஷி. இவர் தனது தாயின் சாயலை முகத்தில் தாங்கியவர். தாயின் சாயலைப் பெற்ற மகனும், தந்தையின் சாயலைப் பெற்ற பெண்ணும் பெரும் அதிர்ஷ்டசாலிகள் என்பார்கள். சுகர் உலகிலேயே மிகச் சிறந்த ஞானவான் என்ற தகுதியைப் பெற்ற அதிர்ஷ்டசாலிதான். தனது அதிர்ஷ்டத்தைக் கூட உணர வேண்டிய அவசியமில்லாத பிரம்ம ஞானி.
மகாபாரதம் உட்பட பதினெட்டுப் புராணங்களை இயற்றிய வியாசரின் புதல்வர் சுகர். இவர் உருவான நிகழ்வு மிக விசித்திரமானது. மகாபாரதப் போர் நிகழ்ந்த குருஷேத்திரம் அது. அங்கே ஹோமம் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் வியாசர். அப்போது கிருதாசீ எனும் மிக அழகிய தேவ கன்னி அங்கே வந்தாள். அவளின் அழகில் மனதைப் பறிகொடுத்தார் வியாசர்.
தன்னைக் கண்டு மனம் மயங்கிய வேதவியாசரின் சாபத்துக்கு ஆளாகாமல் தப்பிவிட எண்ணிய கிருதாசீ, தன் தேவ லோக பலத்தால் தன் உருவை மாற்றிக் கொள்ள முயலுகிறாள். அப்போது அவள் ஆகாயத்தைப் பார்க்கக் கூட்டமாகக் கிளிகள் பறந்துகொண்டு இருந்தன. உடனே பச்சைக் கிளியாக மாறி அக்கூட்டத்தில் இணைந்துவிட்டாள்.
ரிஷி கர்ப்பம் ராத் தங்காது என்பார்கள். கிருதாசீ சுய உருக் கொண்டபோது தான் சூல் கொண்டு இருப்பதை உணர்ந்தாள். அவளுக்குக் கிளிமுகத்துடன் உடனடியாகப் பிள்ளை பிறந்தான். அவரே ஞானவான் சுகப் பிரம்மர். அக்குழந்தையை வியாசரிடம் கொடுத்துவிட்டாள் கிருதாசீ.
பிறந்த குழந்தையை கங்கை நீரில் ஸ்நானம் செய்வித்தார் வியாசர். உடனே பச்சிளம் குழந்தை சுகர் சிறுவனாக மாறிவிட்டான். வியாசரின் அறிவும் ஞானமும் சுகருக்கு முழுமையாக வாய்த்தன. வியாசரிடமே வளர்ந்தான் சிறுவன். இளமை எய்திய பின்னும் பிரம்மசரிய விரதம் கடைப்பிடித்தார் அந்த கிளி முக ஞானி. இவருக்குத் தக்க தருணத்தில் உபநயனமும் நடந்தது.
தேஜஸ்வியான சுகர் உலக ஆசைகள் இன்றி பிரம்மம் ஆனார். இந்த நேரத்தில் ஒரு நாள் பிள்ளையைக் காணாமல் வியாசர் சுகா, சுகா என அழைத்தார். சுகரே பிரம்மம் என்பதால் மரம், மட்டை என அனைத்தும் என்ன என்ன என்று கேட்டு பதில் அளித்தன. ஆனாலும் அதில் சுகர் குரல் இல்லாததால் மேலும் நீள, நெடுக தேடிக்கொண்டே போனார் வியாசர்.
அப்போது ஆற்றின் கரையோரம் சுகர் நடந்து போவதைத் தூரத்திலிருந்து பார்த்த வியாசர் அவரை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டே சென்றார். சில பெண்கள் ஆற்றில் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தனர். சுகர் அவர்களைக் கடந்து சென்றார். ஓரிரு நிமிடத்தில் அதே இடத்திற்கு வயதான வியாசர் வர, குளித்துக் கொண்டிருந்த பெண்கள், அவரைப் பார்த்துப் பதறிக் கரையேறி முழுமையாக ஆடை உடுத்தினராம்.
இதனைக் கண்ட வியாசர் திகைத்துப் போனாராம். இளைஞனான தன் மகன் சென்றபோது சிறிதும் கலங்காத பெண்கள் தற்போது இவ்வாறு நடந்துகொள்ளக் காரணம் கேட்டாராம் வியாசர் அவர்களிடம். சுகர், பிரம்ம ரிஷி; அவர் பார்வையில் ஆண், பெண் பேதமிருக்காது என்றனராம் அப்பெண்கள்.
இந்த சுகப் பிரம்மரிஷிதான் பரீட்சித்து மகாராஜா வைகுந்தம் எய்த, தனது தந்தை தன் மன அமைதி பெற இயற்றிய மத்பாகவத்தை ஏழு நாட்களுக்கு எடுத்துரைத்தார். அதனால் மத் பாகவதம் இன்றும் பிரபலமாக உள்ளது என்பது கண்கூடு.
