

வி.ராம்ஜி
ஆடி அமாவாசைக்கு பின்னரும் பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்றும் வருவதுதான் வரலட்சுமி பூஜை. சில தருணங்களில், ஆடி மாதமே வரலட்சுமி பூஜை வந்துவிடும். இதோ... இப்போதும் ஆடி மாதத்தில்தான் வருகிறது. நாளைய தினம் 9.8.19 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். இது ரொம்பவே விசேஷம்.
இந்தநாளில், வீட்டில் பூஜை செய்யும்போது, மகாலட்சுமியை மட்டுமின்றி அஷ்ட லட்சுமியரையும் மனதால் அழைப்பது இன்னும் இன்னுமான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நம் துன்பத்தின் போது, துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் போது, நமக்குத் துணையாக இருப்பவள் ஆதிலட்சுமி. இந்த உலகின் ஆகப்பெரும் சொத்து என்றால் அது குழந்தைதான். அந்த பிள்ளை பாக்கியத்தைத் தந்தருள்பவள் சந்தானலட்சுமி.
கல்விக்கு இணையான செல்வமில்லை என்போம். அப்பேர்ப்பட்ட கல்வியையும் ஞானத்தையும் தந்தருள்பவள் வித்யாலட்சுமி. உணவுக்குப் பஞ்சமில்லாத நிலையே உன்னத நிலை. ஒரு வீட்டில் உணவு பஞ்சமில்லாமல் இருக்கவேண்டும். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அழையா விருந்தாளியாக, திடீர் விருந்தாளியாக வருவார்கள். எனவே வீட்டில் எப்போதும் தானியத்தை நிறைக்கச் செய்பவள் தானிய லட்சுமி.
எல்லாவற்றுக்கும் பயந்து, எல்லாச் சூழல்களிலும் நடுங்கி, குழப்பமும் கிலேசமுமாக இருப்பதில் இருந்து நம்மை மீட்டெடுத்து, நமக்குள் தைரியத்தைத் தருபவள் தைரியலட்சுமி. அதாவது வீரலட்சுமி. நாம் செய்கிற எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்துக்குத் துணையாக இருந்து, பக்கபலமாக இருந்து, வெற்றியாக்கித் தருபவள் விஜயலட்சுமி. இவர்களையெல்லாம் ஒருங்கே கொண்டு, சுமங்கலி வரம் தருபவள் வரலட்சுமி.
மாங்கல்ய பாக்கியம் நிலைக்கச் செய்யும் பரோபகாரி இவள்தான். ‘தீர்க்கசுமங்கலி பவ’ எனும் ஆசிக்கு ஏற்ப, பெண்களை சுமங்கலியாகவே நீடூழி வாழச் செய்யும் வரப்பிரசாதக்காரி வரலட்சுமி என்கின்றனர் ஆச்சார்யர்கள்.
எனவே, வரலட்சுமி பூஜையான நாளைய தினம், விரதம் மேற்கொண்டு, அம்பாளை மனதார அழையுங்கள். உங்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமியரும் வந்து, உங்களுக்கு எல்லாவிதமான செளபாக்கியங்களையும் தந்தருள்வார்கள் என்பது உறுதி.