லக்ஷ்மி ராவேமா இண்டிகி!  - வரலட்சுமி பூஜை ஸ்பெஷல்

லக்ஷ்மி ராவேமா இண்டிகி!  - வரலட்சுமி பூஜை ஸ்பெஷல்
Updated on
2 min read

வி.ராம்ஜி
திருமணமான பெண்கள் கொண்டாடுகிற பண்டிகை... வரலட்சுமி பூஜை. புகுந்த வீட்டில் இந்த பூஜை கொண்டாடுகிற வழக்கம் உள்ளவர்கள், தவறாமல் கடைப்பிடிப்பார்கள். வழக்கம் இல்லையே என்பவர்கள் கூட, இந்தப் பூஜையின் பலன்களாலும் பூஜை செய்வதால் கிடைக்கும் மனநிம்மதியாலும் சகல ஐஸ்வர்யங்களும் வீடு வந்து நிறைவதாலும் கொண்டாடுகிறார்கள்.
சின்னச்சின்னதான மாறுபாடுகள் இருந்தாலும், ஏறக்குறைய எல்லோருமே அம்பாளை, கலசத்தில் இருத்தி அலங்காரங்கள் செய்து, வீட்டுக்குள் அழைத்து, பூஜை செய்வது வழக்கம். தமிழகத்தில், திருமணமான பெண்கள் தனியாக அமர்ந்தோ, மற்ற சுமங்கலிகளுடனோ செய்வார்கள். கர்நாடகாவில் தம்பதியாக அமர்ந்து பூஜை செய்வார்கள்.
வடை, பாயசம், இட்லி. கொழுக்கட்டை, பட்சணங்கள், சுண்டல், பழங்கள் என தங்களால் முடிந்ததைக் கொண்டு, நைவேத்தியம் செய்து, இந்த பூஜையைச் செய்யலாம்!
ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது கொண்டாடப்படுகிறது. சில தருணங்களில், ஆடி மாதத்தில் அமையும். இதோ... இந்த வருடம்... ஆடி 24ம் தேதியான ஆகஸ்ட் 9ம் தேதி ... வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
வருடந்தோறும் தொடர்ந்து செய்துவிட்டு, ஏதேனும் காரணத்தால் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட, அருகில் பூஜை செய்பவர்கள் வீட்டுக்குச் சென்று, பூஜையில் கலந்து கொள்ளலாம்.
புதிதாகக் கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு வந்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, முதல் பூஜையை தலை நோன்பு என்பார்கள். இந்த வைபவத்தை முன்னிட்டு, பிறந்த வீட்டில் இருந்து எல்லா சீர் வகைகளும் அனுப்புவார்கள். அம்பாளின் முகம், கலசம், பூஜைக்கு வேண்டிய உபகரணங்கள், பழங்கள் என சிறப்பாக சீர்த்தட்டு போல் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
பூஜை செய்யும் இடத்தை, அழகுறச் சுத்தம் செய்து அம்பாளை அமர வைக்கும் இடத்தை தயார் செய்யவேண்டும். அந்தக் காலத்தில், மண் தரை என்பதால், பசுஞ் சாணத்தைக் கொண்டு தரை மெழுகி சுத்தம் பண்ணுவார்கள். சுவரில் சுண்ணாம்பு அடித்து மண்டபத்தில், கலசத்தில், வரலக்ஷ்மி வீற்றிருப்பதைப் போல் வண்ணக் கலவைகளால் சுவரில் ஓவியம் வரைவார்கள். இப்போது அநேகமாக படமாகவே மாட்டி விடுகின்றனர்.
அதேபோல், வரலக்ஷ்மி முகங்கள் என்று வெள்ளியில் செய்தது எதுவும் கிடையாது. கண், மூக்கு, வாய், காது என்று வெள்ளியில் செய்த அவயவங்கள் மட்டுமே கிடைக்கும்.
வெள்ளி, பித்தளை, வெண்கலம் அல்லது செப்புச் செம்புகளிலோ, சிறிய குடங்களிலோ கலசம் வைப்பார்கள். அதில், சந்தனத்தை இடுவார்கள். அந்த சந்தனத்தில் உருவங்களைப் பொருத்துவார்கள். கலசத்தில், அரிசியை நிரப்பி, வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வெள்ளிக்காசுகள், தங்க நகை என அதில் போட்டு, அதன்மேல் மாவிலைக்கொத்தைச் சொருகி, குடுமியுடன் கூடிய நல்ல தேங்காயை, மஞ்சள் பூசி வைப்பார்கள். .
எலுமிச்சை பழம், விச்சோலை, கருகமணி அவசியம் வைப்பார்கள். இப்போது வெள்ளியில் செய்த வரலக்ஷ்மி முகம் அழகான நகை நட்டுகள் வேலைப்பாடுகளுடன் கிடைக்கின்றன. அதை வாங்கிக் கலசத்தின் மேல் பொருத்தி விடுவது வழக்கமாகிவிட்டது.
அம்பாள் உருவத்துக்கு, விதவிதமான பாவாடை, புடவைகளையும் அணிவித்து அழகாக அலங்காரங்கள் செய்யலாம். இதுபோல், அலங்கரித்து , அம்மனை தனியான இடத்தில் அமர்த்துவார்கள். பூஜை செய்யப்போகும் இடத்தில் மாக்கோலமிட்டு, செம்மண் பூசி அழகாக பந்தல் அமைப்பார்கள். ஒரு மேஜையைக் கொண்டு, பந்தல் அமைத்து, வாழைக் கன்றுகளைக் கட்டி, மாவிலைத் தோரணங்கள் அமைத்து அலங்கரிப்பார்கள்.
தாமரை, மல்லிகை, மருக்கொழுந்து, ரோஜா, சம்பங்கி என மலர்ச்சரங்களும் மாலைகளும் அணிவிக்கலாம். குத்துவிளக்குகளை இரண்டு பக்கமும் வைத்து ஏற்றவேண்டும்.
தன, தான்ய லக்ஷ்மியுடன், வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள். நோன்பின் முக்கிய அம்சமாக நோன்புக்கயிறு வைத்து, அதையும் பூஜை செய்து, மஞ்சள்சரடை பெரியவர்களைக் கொண்டு வலதுகையில் அணிந்து கொள்வார்கள்!
பூஜை செய்யும் பந்தலுக்குள் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி, மணைப்பலகை மீது கலசம் வைத்திருப்பார்கள்.
முதல்கட்டமாக, முதல்நாளான வியாழக்கிழமை, சாயங்காலத்திற்குப் பின் அம்பாளுக்கு விளக்கேற்றி சந்தனம் குங்குமமிட்டு, பூக்கள் சொரிந்து வழிபட்டு நமஸ்கரிக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை. விடிகாலை. வாசலில் கோலம்போடுவதில் ஆரம்பித்து, குளித்து, மடியாக நைவேத்தியங்களைத் தயாரித்து, மண்டபத்தில் கோலமிட்டு, செம்மண் கோலமும் இட்டு, பூஜைக்கு தேவையானவற்றைக் கொண்டு, அம்பாளை எடுத்து வருவார்கள். இதை அம்பாளை அழைத்தல் என்பார்கள்!
கற்பூர ஆரத்தி காண்பித்து, நமஸ்கரித்து, உடன் ஒரு சுமங்கலி அல்லது, கன்னிப்பெண்ணின் உதவியுடன், ’செளபாக்கியத்தைக் கொடுக்கும் லக்ஷ்மி தேவியே, நீங்கள் வர வேண்டுமம்மா’ என்று சிரத்தையுடன் மனமுருகிப் அழைத்து, கவனமாக கலசத்தை உள்ளே எடுத்துவந்து தயாராக அலங்கரித்து, தீபங்களுடன் கூடிய மண்டபத்தில், கிழக்கு முகமாக வைத்து பூஜிக்கவேண்டும்.
பாக்யத லக்ஷ்மி பாரம்மா. லக்ஷ்மி ராவேமா இண்டிகி. எனப் பாடுவார்கள்.
அம்மனுக்கு எல்லாவித உபசாரங்களையும் செய்து ஆசனத்தில் வைத்து, ஆடை, ஆபரணங்கள், ரவிக்கைத் துணி, பஞ்சு வஸ்திர மாலைகள் அணிவித்து, அஷ்டோத்திர சத நாமாவளிகள் சொல்லி பூக்களினால் அர்ச்சனை செய்யலாம். தூப ,தீபங்களைக் காட்டி, நைவேத்தியம் செய்யவேண்டும். நோன்புச் சரடுகளில் ஒவ்வொரு புஷ்பங்களைத் தொடுத்து வைத்திருப்பதை அம்பாளின் பாதங்களில் வைத்து அதற்கும் பூஜை செய்யவேண்டும்.
பூஜை முடிந்து ஒவ்வொரு சரடாக எடுத்துப் பெரியவர்களால் சுமங்கலிகளுக்கும், கன்யாப் பெண்களுக்கும், வலது கையில் கட்டப் படும். அப்படிக் கட்டும்போது கையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பூ, தேங்காய், பழங்களைக் கொடுத்து குங்குமமிட்டு சரடைக் கட்டுவார்கள். பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.
ஆத்மார்த்தமாகவும் முழு ஈடுபாட்டுடனும் இந்த வரலக்ஷ்மி பூஜையைச் செய்யுங்கள். நம் வீட்டுக்கு ஓடோடி வருவாள் லக்ஷ்மிதேவி. கேட்டதையெல்லாம் தந்து மகிழ்வாள் அம்பிகை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in