Published : 07 Aug 2019 11:21 AM
Last Updated : 07 Aug 2019 11:21 AM

சுமங்கலிகளுக்கு புடவை, வளையல், குங்குமம்; வரலட்சுமி பூஜை ஸ்பெஷல்

வி.ராம்ஜி
வரங்களைத் தந்தருளும் வைபவம்... வரலட்சுமி விரதம். இந்த விரதத்தை அனுஷ்டித்து, முறையே பிரார்த்தனை செய்தால், எல்லா வளங்களையும் தந்தருள்வாள் மகாலட்சுமி என்கிறது புராணம்.
திருமணமான பெண்கள், இந்த விரதத்தை அனுஷ்டித்து பூஜை செய்தால், குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும். மாங்கல்ய பலம் பெருகும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வருகிற ஆடி 24ம் தேதி ஆகஸ்ட் 9ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். இந்தநாளில், பெண்கள் வீட்டை சுத்தமாக்கி, பூஜையறையை சுத்தப்படுத்தி, கலசம் வைத்து கலசத்தில் மகாலட்சுமியை ஆவாஹனம் செய்து, வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். நாம் நினைத்ததையெல்லாம் நம் வீட்டுக்கே வந்து அருளிச்செய்வாள் மகாலட்சுமி.
இந்த நாளின் போது, வீட்டில் உள்ள சுமங்கலிகள் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்வது சிறப்பு. மேலும் அக்கம்பக்க வீடுகளில் உள்ள சுமங்கலிகளையும் பூஜைக்கு அழைப்பது இன்னும் வளம் சேர்க்கும். மேலும் அக்கம்பக்க பெண்களுக்கு புடவை, ஜாக்கெட் பிட், வளையல், மஞ்சள், குங்குமம் என வழங்கலாம். இதனால் சுமங்கலிகள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்; வயதில் மூத்த சுமங்கலிகளின் ஆசியும் கிடைத்து, ஆனந்தமாக வாழலாம்.
வரலட்சுமி பூஜை நன்னாளில், மகாலட்சுமியை ஆராதியுங்கள். மனம் ஒருமித்து மகாலட்சுமியை பூஜித்து மகிழுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைத்து இனிதே வாழ்வீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x