Published : 07 Aug 2019 10:33 AM
Last Updated : 07 Aug 2019 10:33 AM

பூமியெங்கும் மகாலட்சுமி! - வரலட்சுமி விரதம் ஸ்பெஷல்

வி.ராம்ஜி

நம் தேசம் முழுவதும், பூமியெங்கும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். நம் தேசத்தை, பரத கண்டம் என்பார்கள். பாரத தேசம் என்று போற்றுவார்கள். எதனால் இந்தப் பெயர்... இந்த பரத கண்டம் முழுவதும் வியாபித்து அருளாட்சி செய்கிறாள் லக்ஷ்மிதேவி என்கிறது புராணம். இதுகுறித்து விளக்குகிறது புராணக் கதை ஒன்று.
கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகள் சகுந்தலை. ஒருநாள்... வனத்தில் உள்ள ஆஸ்ரமத்தில் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு துஷ்யந்தன் என்கிற மன்னன் வேட்டையாட வந்தான் . சகுந்தலையைக் கண்டான். காதல் கொண்டான். காந்தர்வத் திருமணம் நிகழ்ந்தது.
தன்னையே மறந்த சகுந்தலை, துஷ்யந்தனின் நினைவாகவே இருந்தாள். அந்த சமயம் பார்த்து, கோபத்துக்குப் பேர்போன துர்வாச முனிவர், ஆஸ்ரமத்துக்கு வந்தார். ஆனால் அவர் வந்ததைக் கூட அறியாமல், துஷ்யந்த நினைவில் மூழ்கிக் கிடந்தாள் சகுந்தலை.
எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் துர்வாசர், வந்தவனை வரவேற்கவில்லையே என்று இன்னும் ஆவேசம் கொண்டார். ’ உன்னை துஷ்யந்தன், மறந்து போகக் கடவது’ எனச் சாபமிட்டாள். கர்ப்பமான நிலையில் இருந்த சகுந்தலையை மறந்தேபோனான் துஷ்யந்தன். பிறகு, சகுந்தலைக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பரதன் எனப் பெயரிட்டாள்.
அடர்ந்த வனப்பகுதியில், சிங்கக்குட்டிகளுடன் குட்டியாய் பயமின்றி ஓடியாடி விளையாடினான் பரதன். பிறகு, ஒருகட்டத்தில்... துர்வாசரின் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றாள் சகுந்தலை. மகன் பரதனுடன் சென்று, துஷ்யந்தனை சந்தித்தாள். அவனுக்கும் ஞாபகம் வந்தது. இருவரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள்.
‘‘உன் மகன் பரதன், லக்ஷ்மியின் பேரருளைப் பெற்றவன். எதிர்காலத்தில் மாபெரும் சக்கரவர்த்தியாக, மாமன்னனாகத் திகழ்வான். இந்த பூமியானது, இவனுடைய பெயரால், அழைக்கப்படும்‘‘ என அசரீரி கேட்டது.
அதன்படி, நம் அன்னைபூமிக்கு, பரத கண்டம் எனப் பெயர் அமைந்தது. இந்தப் பரதக் கண்டம் முழுவதும் லக்ஷ்மி தேவியானவள், வாசம் செய்து, ஆட்சி செய்கிறாள் என்கிறது புராணம்!
இவளை ஆராதிக்கிற விதமாக, பூமியெங்கும் வியாபித்திருக்கிற லட்சுமியை நம் வீட்டுக்கு அழைக்கும் பண்டிகையாக, கொண்டாடப்படுகிறது வரலட்சுமி விரதம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x