Published : 07 Aug 2019 09:18 AM
Last Updated : 07 Aug 2019 09:18 AM

வருவாள் மகாலட்சுமியே..! - வரலட்சுமி பூஜை இப்படித்தான்! 

வி.ராம்ஜி
ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வருகிற வளர்பிறை நாளில், பெளர்ணமிக்கு முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையில், கொண்டாடப்படுகிறது வரலட்சுமி விரதம். வீட்டில் சுபிட்சம் நிலவவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கவும் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 9.8.19 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம்.
வரலட்சுமி விரதத்தை, வெள்ளிக்கிழமையன்று காலை அல்லது மாலை என எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், காலை நேர பரபரப்பில் செய்யமுடியாமல் போகலாம். அவர்கள், மாலையில் வீட்டுக்கு வந்து இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.
வரலட்சுமி விரத பூஜை, முழுக்க முழுக்க பெண்கள் நடத்துகிற பூஜை. பெண்கள் இருக்கிற விரதம். இந்தப் பூஜைக்குத் தேவையான பொருட்களையெல்லாம் முதலிலேயே தயாராக வைத்துக் கொண்டு, காலையில் அல்லது மாலையில் இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.
எந்தவொரு பூஜையைச் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயக வழிபாடு என்பது மிக மிக அவசியம். எனவே முதலில் கணபதியைத் தொழுது, ‘இந்த வரலட்சுமி பூஜையைத் தொடங்குகிறேன்’ என்று ஒப்புதல் வாங்கிவிட்டு, பூஜையில் இறங்கவேண்டும்.
பின்னர், தாம்பாளம் ஒன்றில் பச்சரிசியை பரப்பி வைத்துக்கொள்ளுங்கள். அதன் மீது கலசத்தை வைத்துக்கொள்ளவும். பழம், வெற்றிலை, பாக்கு முதலானவற்றை வைக்கவேண்டும். இந்த பூஜைக்கு, லட்டு, தயிர், பசும்பால், தேன், நெய், கற்கண்டு, கொழுக்கட்டை முதலானவற்றை நைவேத்தியமாகப் படைப்பது ரொம்பவே விசேஷம்.
அதேபோல், மாதுளை, ஆரஞ்சு, விளாம்பழம், மாம்பழம், திராட்சை முதலான பழங்களையும் நைவேத்தியத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவற்றை தயாராக வைத்துக்கொண்ட பிறகு, வீட்டு நிலைவாசலில் நின்றுகொள்ளுங்கள். வெளியே நோக்கி, கற்பூர தீபாராதனை காட்டுங்கள். அதாவது, ‘மகாலட்சுமித் தாயே. எங்கள் வீட்டுக்குள் வாருங்கள் அன்னையே’ என்று அழைக்கவேண்டும்.
இதன் பிறகு, மகாலட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டாள். பூஜையறைக்குச் செல்லுங்கள். மகாலட்சுமித் தாயாரை மனதார நினைத்துக்கொண்டு, ஆவாஹனம் செய்யவேண்டும். அவளுக்கு, குளிரக்குளிர பூஜைகள் செய்யுங்கள். ஸ்தோத்திரம் சொல்லுங்கள். லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள்.
இதையடுத்து, நோன்புக்கயிறை கும்பத்தின் மீது சாற்றுங்கள். லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது, தனம், தானியத்தைப் பெருக்கும். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும். 108 போற்றி சொல்லி, மகாலட்சுமித் தாயாரை ஆராதனை செய்யுங்கள். ‘தாயே, எங்கள் வீட்டில் எல்லா செல்வங்களையும் தந்து, எங்களை இன்னல்களில் இருந்து காத்தருள்வாய்’ என்று வணங்கி வேண்டுங்கள்.
பின்னர் பூஜையை நிறைவு செய்யும் தருணம். உங்கள் வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு பிரசாதங்களை வழங்குங்கள். பிரசாதம் கொடுத்துவிட்டு, அவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுங்கள். பிறகு, நோன்புச்சரடை கையில் கட்டிக் கொள்ளுங்கள்.
வரலட்சுமி பூஜையின் போது, மகாலட்சுமியின் பேரருளைப் பெறுவதற்கு ஏராளமான மந்திரங்களும் ஸ்தோத்திரங்களும் ஸ்லோகங்களும் இருக்கின்றன. முக்கியமாக, லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம் சொல்லுங்கள்.
உங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி, வரலட்சுமியென வருவாள்; வரம் அனைத்தும் தருவாள். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றி அருள்வாள்!
9.8.19 வரலட்சுமி விரதம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x