Published : 06 Aug 2019 12:13 PM
Last Updated : 06 Aug 2019 12:13 PM

சிவனின் ஸ்நேகிதர் சுந்தரர் பெருமான்;  திருக்கச்சூரில் குருபூஜை ஆராதனை

வி.ராம்ஜி

 
திருக்கச்சூரில், சுந்தரருக்கான ஈசன் யாசகம் கேட்டு, விருந்திட்டு மகிழ்ந்தார். சுந்தரருடன் தொடர்பு கொண்ட திருக்கச்சூர் திருத்தலத்தில், நாளைய தினம் 7.8.19 புதன்கிழமை, ஆடி சுவாதி ஆராதனை விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஆடி சுவாதி... சுந்தரர் குருபூஜை நன்னாள்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில், முக்கியமானர்களாகக் கருதப்படுபவர்களில் சுந்தரரும் ஒருவர். இன்னும் சொல்லப் போனால், சுந்தரருக்கு எவருக்குமே கிடைக்காத சிறப்பு ஒன்று உண்டு. சிவனார், தன்னுடைய ஸ்நேகிதனாக, தோழனாக, நண்பனாகவே சுந்தரரை வரித்துக்கொண்டார். அந்த அளவுக்கு சிவபக்தியில் திளைத்திருந்தார் சுந்தரர். 
சுந்தரர் பெருமான், திருக்கச்சூர் எனும் திருத்தலத்துக்கு வந்த போது, கடும் வெயில். பசி வேறு. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. அப்படியே ஓர் மரத்தடியில் அமர்ந்தவர், சாய்ந்து மயங்கினார். 
அந்த இடத்துக்கு சுந்தரர் வந்திருக்கிறார் என்பதை அறிந்த சிவனார், வயதான அந்தணர் வேடத்தில் சென்றார். சுந்தரர் கடும் பசியுடன் தவிப்பதை உணர்ந்தார். உடனே சுந்தரரின் திருவோட்டை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வீடாகச் சென்றார். ‘சுந்தரர் வந்திருக்கிறார். அன்னமிடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டே உணவு சேகரித்தார். 
பிறகு, யாசகத்தில் கிடைத்த உணவை எடுத்துக்கொண்டு, சுந்தரரிடம் சென்றார் சிவனார். ‘இதோ... உணவு. சாப்பிடுங்கள்’ என வழங்கினார். சுந்தரரும் பசியாறினார். ‘இந்த வயதான காலத்தில், எனக்கு உதவிய உங்கள் நல்ல உள்ளம் வாழ்க’ என்றார் சுந்தரர். அப்போது சுந்தரருக்கு தன் ரூபத்தைக் காட்டியருளினார் சிவபெருமான். 
அந்த இடம், ஆலயத்தில், பிராகாரப் பகுதியில் இருக்கிறது. சுந்தரருக்கு உணவிட்ட சிவனாருக்கு, அங்கே ஓர் சந்நிதியும் இருக்கிறது. அவருக்கு, விருந்திட்ட ஈசன் என்றே பெயர் அமைந்தது. 
ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரர் பெருமான், சிவனுள் ஐக்கியமானார் என்கிறது புராணம். எனவே ஒவ்வொரு ஆடி சுவாதியும், சுந்தரர் குருபூஜை தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருவாரூர் உள்ளிட்ட திருத்தலங்களில், சுந்தரர் குருபூஜை விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
அதேபோல், திருக்கச்சூர் திருத்தலத்திலும் சுந்தரர் குருபூஜை விழா நாளைய தினம் 7.8.19 புதன்கிழமை நடைபெறுகிறது. சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து ரயில்வே கேட்டைக் கடந்து, 3 கி.மீ. பயணித்தால், திருக்கச்சூர் கிராமத்தையும் பிரமாண்டமான தியாகராஜர் கோயிலையும் அடையலாம். சிங்கபெருமாள் கோயிலில் இருந்தும் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், திருக்கச்சூரை அடையலாம். 
பிரமாண்டமாக அமைந்துள்ளது திருக்கச்சூர் தியாகராஜர் திருக்கோயில். நாளை 7.8.19 புதன்கிழமை காலை 9 மணிக்கு கோயிலில் உள்ள விருந்திட்ட ஈஸ்வரருக்கும் சுந்தரருக்கும்  சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
மதியம் 12 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதன் பின்னர், கோயிலின் உள்பிராகாரத்தில், சுந்தர மூர்த்தி சுவாமிகள், யானை வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதையடுத்து, திருக்கயிலாயக் காட்சி நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதன் பிறகு, அன்னதானம் நடைபெறும்.
சுந்தரருக்காக, சிவபெருமான் யாசகம் கேட்டு விருந்திட்ட திருத்தலமான திருக்கச்சூரில், சுந்தரர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு, ஈசனைத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். தனம், தானியம் ஆகியவற்றை விருத்தியாக்கி, நம்மையும் நம் சந்ததியையும் தந்து மகிழச் செய்து அருளுவார் திருக்கச்சூர் ஈசன். 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x