Published : 06 Aug 2019 10:58 AM
Last Updated : 06 Aug 2019 10:58 AM

ஆடி சுவாதி... சேரமான் நாயனார் குருபூஜை;  திருப்பட்டூரில் கோலாகல விழா

வி.ராம்ஜி


ஆடி சுவாதியில் சேரமான் நாயனார் குருபூஜை விமரிசையாக நடைபெறும். நாளை புதன்கிழமை 7.8.19 ஆடி சுவாதி நட்சத்திரம். எனவே, இந்தநாளில், திருப்பட்டூர் பிரம்மா கோயிலிலும் அருகில் உள்ள அய்யனார் கோயிலிலும் விசேஷ பூஜைகள், திருவீதியுலாக்கள் கோலாகலமாக நடைபெறுகிறது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ. பயணித்தால் திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.
இங்குதான், நம் தலையெழுத்தையே திருத்தி அருளும் பிரம்மா கோயில் அமைந்துள்ளது. வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோரது திருச்சமாதிகள் இருக்கின்றன. மேலும் பிரம்மா குடிகொண்டிருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகில், அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கே, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் நாயனார், தான் இயற்றிய ‘திருக்கயிலாய ஞான உலா’ எனும் நூலை எழுதினார் என்றும் தன்னுடைய இனிய நண்பரான சுந்தரருடன் யானையிலேறி திருக்கயிலாயம் சென்று, சிவனாரின் திருப்பாதங்களை இருவரும் சரணடைந்தனர் என்றும் சொல்கிறது புராணம். 
சேரமான் நாயனார் எழுதிய ‘திருக்கயிலாய ஞான உலா’வைக் கண்டு சொக்கிப் போன சுந்தரர், அவரை அழைத்துக்கொண்டு திருக்கயிலாயம் சென்ற நிகழ்வுடன் தொடர்பு கொண்ட திருத்தலம் என்று திருப்பட்டூர் அய்யனார் கோயில் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.
ஓர் ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திர நாளில், சேரமான் நாயனாரும் சுந்தரரும் சிவ தரிசனம் செய்தார்கள். அப்போது சிவனார் இருவரையும் தன் திருவடியில் சேர்த்துக்கொண்டும் என சிவ புராணங்கள் விவரிக்கின்றன. எனவே, சேரமான் நாயனார், சுந்தரர் ஆகியோரின் குருபூஜை நாளாக ஆடி சுவாதி அனுஷ்டிக்கப்படுகிறது.
திருப்பட்டூரில், இதையொட்டி, ஆடி சுவாதி விழா தினமும் நடந்தேறி வருகிறது. நாளைய தினம் 7.8.19ம் தேதி புதன்கிழமை, சேரமான் நாயனார், சுந்தரர்  பெருமான் ஆகியோர் யானை வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். 
இதையொட்டி, திருப்பட்டூர் அய்யனார் கோயிலில், காலையில் இருந்தே சிறப்பு பூஜைகளும் அபிஷேக அலங்காரங்களும் விமரிசையாக நடைபெறும். 
இதேபோல், தமிழகத்தில் உள்ள பல சிவாலயங்களிலும் சுந்தரர் குருபூஜையும்  சேரமான் நாயனார் குருபூஜையும் கோலாகலமாக நடைபெறும். இதில் கலந்துகொண்டு, குருவருளுடன் இறையருளையும் பெறுவோம்! 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x