

வி.ராம்ஜி
ஆடிச்செவ்வாயில் ராகுகால வேளையில் துர்கைக்கு அல்லது அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். எல்லா தீயசக்திகளும் உங்கள் வீட்டில் இருந்து விலகிச் செல்லும் என்பது உறுதி.
பொதுவாகவே, செவ்வாய்க்கிழமையன்று ராகுகால வேளையில், துர்கை வழிபாடு என்பது நம் துயரையெல்லாம் துடைக்கவல்லது என்பார்கள். ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதம். எனவே, இந்த ஆடி மாதத்தில் வருகிற செவ்வாய்க்கிழமைகளில், ராகுகாலவேளையில் அம்மனை வழிபடுவதும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி பிரார்த்தனை செய்துகொள்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது, மகத்துவம் நிறைந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று ஆடிச்செவ்வாய். செவ்வாய்க்கிழமையன்று மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை உள்ள காலம், ராகுகாலம். எனவே இந்தநாளில், ராகுகால வேளையில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். சிவாலயத்தில் உள்ள கோஷ்டத்தில் ஸ்ரீதுர்கைக்கு சந்நிதி அமைந்திருக்கும். அங்கே சென்று, துர்கைக்கும் அம்மனுக்கும் செந்நிற மலர்கள், செவ்வரளி முதலானவற்றைச் சூட்டுங்கள். முடிந்தால், எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். குங்கும அர்ச்சனை செய்யுங்கள். சந்நிதியில் தருகிற குங்குமத்தை கன்னிப்பெண்கள் நெற்றியில் இட்டுக்கொள்ள, விரைவில் கல்யாண வரம் தந்தருள்வாள் துர்கை. முக்கியமாக, எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.
மேலும் இல்லத்தரசிகள், குங்குமத்தை உங்கள் மாங்கல்யத்தில் வைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கணவரின் ஆயுள் கூடும். ஆரோக்கியத்துடன் இனிதே வாழ்வார்.
அதுமட்டுமா? இதுவரை உங்கள் வீட்டில் இருந்த தீயசக்திகள் அலறியடித்துக்கொண்டு ஓடும். தரித்திர நிலை மாறும். சுபிட்சம் இல்லத்தில் குடிகொள்ளும் என்பது உறுதி.