Published : 30 Jul 2015 12:37 PM
Last Updated : 30 Jul 2015 12:37 PM

சித்தர்கள் அறிவோம்: ஞானமே சமாதி- தீப்பெட்டி சுவாமிகள்

“சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும்

சமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி

சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றோ

சமாதி யமாதி தலைப்படும் தானே.”

நாம் இறைவனுடன் ஒன்றுவதே சமாதி நிலையாகும். அந்தச் சமாதி நிலையை அடைந்துவிட்டால் நமக்கு அனைத்தும் கூடிவரும். அதனை அடைவதற்கான அஷ்டாங்க ஞானயோகப் பயிற்சியின் ஏழு நிலைகளையும் கடந்தால் தான் இறுதி நிலையான சமாதி நிலையை அடைய முடியும். சமாதி நிலையில் தான் எட்டுச் சித்திகள் என்று சொல்லக்கூடிய அட்டமா சித்திகளை அடையமுடியும் என்று திருமூலர் கூறுகிறார்.

சமாதி நிலை என்பது என்னவென்று காகபுஜண்டர் கூறுகிறார்.

“சமாதியே சொல்லுகிறேன் வசிஷ்டநாதா

சந்ததிகள் அனைத்திற்கும் தெளிவாக

சமாதியே நீஆனாய் வெகுநாள் யோகி

சாகும்நாள் தெரிந்தவரே சமாதி தன்னில்

சமாதியே மண்மூடல் அரையாங்கில்லை

தான்வைத்து மூடவல்ல ஒளியுமல்ல

சமாதியே பிறர் காணா மறையுமல்ல

தானிந்த உயிர்விடலு மல்லத்தானே.”

அதாவது நம் உடலை விட்டு உயிர் நீங்குதல் சமாதியல்ல. நாம் இறந்த பின் நமது உடலை மண்ணிற்குள் போட்டுப் புதைப்பதும் சமாதியல்ல. நீண்ட நாட்கள் தவமிருந்து பெற்ற ஞானமே சமாதி என்று கூறுகின்றார்.

சமாதி என்றால் என்ன?

சமாதி என்பது என்னவென்று திருமூலர், தமது மற்றொரு பாடலில் கூறுகிறார்.

“கற்பனை யற்று கனல்வழி யேசென்று

சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்

பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்

தற்பர மாகத்தகுந் தண் சமாதியே.”

நாம் மனதைக் கற்பனையில் செல்லவிடாது ஒடுக்கி மூலக்கனல் வழியே சென்றால் அனைத்தையும் சிருஷ்டிக்கும் சிவனது பேரொளியைக் காணலாம் . அந்தப் போரொளி நம்மைப் பொற்பாதங்களையுடையவனிடம் கொண்டு சேர்க்கும். அவனுக்கு இணையாக இருக்கும் பேற்றினைக் கொடுக்கும். இதுவே சமாதி நிலை என்று கூறுகிறார்.

இப்படிச் சமாதி நிலையில் சிவத்துடன் ஒன்றிவிட்ட சித்தர்களும், ஞானிகளும் தமது ஸ்தூல சரீரம் புதைக்கப்பட்டாலும் சூக்கும சரீரத்துடன் ஜீவசமாதியினுள் இருந்து சிவத்திற்கொப்பான அனைத்துச் செயல்களையும் செய்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஜீவசமாதியினுள் தான் தீப்பெட்டி சுவாமிகள் அருள்தந்து கொண்டிருக்கிறார்.

அருப்புக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட தீப்பெட்டி சித்தரின் இயற்பெயர் சுந்தரமகாலிங்கம். இவரும், புளியம்பட்டி திருநகரத்தில் சித்தபீடம் கொண்டிருக்கும் அய்யா என்ற வீரபத்திர சுவாமிகளும் சமகாலத்தவர் ஆவர். இருவரும் சேர்ந்து சதுரகிரி மலைக்குச் சென்று வருவதுண்டு.

ஓருமுறை இவர் அருகிலிருந்த கடலைக் காட்டிற்குள் சென்று கொண்டிருந்த போது, பெரும் மழை பெய்யத் துவங்கிவிட்டது. அந்தக் காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மழைக்கு ஒதுங்க இடமின்றித் தவிப்பதைப் பார்த்து, அனைவரையும் தன் அருகே அழைத்தார். அவர்கள் நின்றிருந்த இடத்தில் மட்டும் வட்டமாக மழை விழவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுவாமிகளின் மகிமை வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தது என்று சொல்லப்படுகிறது.

தம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மண்ணை எடுத்துப் பிரசாதமாகக் கொடுப்பாராம். அது பக்தர்களின் கையில் விழும்போது சர்க்கரையாக மாறிவிடுமாம்.

வைத்தியரும் ஆனவர்

தீப்பெட்டி சுவாமிகள் ஓரு சித்த வைத்தியராகவும் இருந்திருக்கிறார். அவர் ஒரு ஓட்டுத் துண்டை எடுத்து மந்தரித்ததும், அது தங்கமாக மாறிவிடும் என்றும் பேசப்படுகிறது. பிறகு அதனைத் துணியில் முடிந்து தீ வைத்து எரிப்பாராம். அது பஸ்பமாகியதும் அதனை மருந்துடன் கலந்து, உடல்நலக்குறைவு என்று வந்தவர்களுக்குக் கொடுப்பாராம்.

சுவாமிகளுக்கு 85 வயதாகும் போது, தாம் இந்த உடலை விட்டு நீங்கும் காலம் வந்துவிட்டது என்று அறிவித்து, சமாதியாகும் நேரம், நாள், இடம் ஆகியவற்றைக் கூறியிருக்கிறார்.

அவர் அறிவித்தபடி மாசி மாதம், திங்கட்கிழமை அன்று காலை 7.30 மணிக்குச் சமாதி நிலையை அடைந்தார். அவர் உடலை மூன்று நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக வைத்து பூசைகள் செய்த பின்னர் சமாதியினுள் வைத்துள்ளனர். சமாதி பீடத்தின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஜீவசமாதியைத் தரிசிக்க:

அருப்புக்கோட்டை சொக்கலிங் கபுரத்தில் உள்ள கல்லுமடம் பள்ளியின் இடதுபுறம் செல்லும் சாலையில் தேவாங்கர் கலைக் கல்லூரியின் பின்புறம் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x