Published : 04 Aug 2019 11:13 AM
Last Updated : 04 Aug 2019 11:13 AM

ராகு - கேது தோஷம் போக்கும் நாக சதுர்த்தி இன்று! 

வி.ராம்ஜி
இன்று நாக சதுர்த்தி (4.8.19). நாகர் சிலையை வழிபட்டாலும் புற்றுக்கு பால் வார்த்து வேண்டினாலும் ராகு - கேது தோஷம் விலகிவிடும் என்பது ஐதீகம். 
ஒவ்வொரு ஆடி மாதத்தின் கருட  பஞ்சமிக்கு முந்தைய நாள் வருகிற சதுர்த்தி, நாக சதுர்த்தி எனப் போற்றப்படுகிறது. எனவே இன்றைய நாளில், நாகர் வழிபாடு செய்வதும் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே விசேஷம். இதனால் ராகு கேது தோஷங்கள் நிவர்த்தியாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மேலும் சர்ப்பத்தால் உண்டான தோஷங்கள், கால சர்ப்ப தோஷங்கள் முதலானவை அனைத்தும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 
அருகில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ள ஆலயங்களுக்குச் சென்று நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்யுங்கள். மஞ்சள் குங்குமமிட்டு வணங்குங்கள். புற்று உள்ள கோயிலுக்குச் சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. கோயிலுக்கு சென்று, புற்றுக்கு பால் வார்த்து வேண்டிக்கொள்ளுங்கள். 
பிரிந்த தம்பதி ஒன்றுசேருவார்கள். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். கல்யாணத் தடைகளும் சர்ப்ப தோஷங்களும் விலகும். சீக்கிரமே திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கைகூடும். குழந்தைகளுக்கு தோஷத்தால் அடிக்கடி வந்து இம்சை பண்ணும் நோய்கள் அனைத்தும் நீங்கி, ஆரோக்கியத்துடன் வளர்வார்கள்; வாழ்வார்கள் என்பது உறுதி. 
நாக சதுர்த்திக்கு விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. இன்றைய ஆடி நாக சதுர்த்தியில் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் வருகிற சதுர்த்தி நாளில், விரதம் மேற்கொள்வார்கள். அடுத்து வருகிற ஆனி மாத நாக சதுர்த்தி வரை விரதம் இருப்பார்கள். ஆக, நாக சதுர்த்தி எனும் முக்கியமானதொரு நன்னாளில், நாகர் சிலையை தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், நாகர் சிலை பிரதிஷ்டை செய்யலாம். புற்று வழிபாடு இன்னும் மகத்துவம் வாய்ந்தது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x