Published : 04 Aug 2019 10:42 AM
Last Updated : 04 Aug 2019 10:42 AM

ஆடி அசத்திய தில்லைக் காளிக்கு ஆடி முழுவதும் விசேஷம்!  

வி.ராம்ஜி

  சிவனாருடன் போட்டி போட்டு ஆடி அசத்திய காளிதேவிக்கு, தில்லையம்பதி எனப் போற்றப்படும் சிதம்பரம் தில்லைக்காளி கோயிலில் ஆடி மாதம் முழுவதும் அபிஷேக ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. 
   சிவனாருக்கும் பார்வதிதேவிக்கும்  நடனப் போட்டி.  சிவனார் வலது கையைச் சுழற்றி ஆட, உமையவளும் அப்படியே ஆடினாள். அவர் இடது காலைச் சுழற்றி ஆட, அவளும் அவ்விதமே ஆடினாள். சபையில் இருந்தவர்கள் வியந்து போனார்கள். ஆடலரசனின் மனைவி ஆடலரசிதான் என்பது போல் பிரமித்துப் பார்த்தார்கள். 
அந்தவேளையில், சட்டென்று தனது காதிலிருந்து குண்டலத்தை விழச் செய்தார் சிவபெருமான். தனது கால் விரல்களால் பற்றி எடுத்த நடன ராஜா, அப்படியே காலை உயர்த்தி, காது வரைக்கும் தூக்கினார்; காலாலேயே குண்டலத்தைக் காதில் அணிந்துகொண்டார். இதைக் கண்டு திகைத்து விக்கித்தாள் தேவி. தனது ஆட்டத்தை நிறுத்தினாள். ‘சபையில் அனைவரும் கூடியிருக்கும் வேளையில், ஒரு பெண்ணானவள் இப்படிக் காலைத் தூக்கி ஆடுவது எப்படிச் சாத்தியம்?’ என்று யோசித்தவளாக, அவமானத்துடன் தலைகுனிந்து நின்றாள் தேவி.  
  அந்த வெட்கமும் தலைக்குனிவும் அவளுள் கோபத்தைத் தூண்டின. உக்கிரமானாள் தேவி. மகா காளியின் உருவெடுத்து நின்றாள். விறுவிறுவென வனத்தின் எல்லைக்குச் சென்றாள். இன்றைக்கும் எல்லைக்காளியாக, தில்லைக் காளியாக கோயில்கொண்டபடி, அருள்பாலித்து வருகிறாள். தில்லை என்கிற ஒருவகை மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதி தில்லை வனம் எனப்பட்டது. தற்போது சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. சிவனாரும் தேவியும் ஆடிய அந்த இடம் பொற்சபை எனப் போற்றப்படுகிறது.
 இன்றைக்கும், சிதம்பரம் தலத்துக்கு வந்து, ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜரைத் தரிசிக்கின்றனர். முன்னதாக, தனிக்கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீதில்லைக்காளியை  தரிசித்துவிட்டுத்தான், ஸ்ரீநடராஜரை தரிசிக்கவேண்டும் என்பது ஐதீகம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.  
  சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீநடராஜர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது தில்லைக்காளியம்மன் கோயில். மன்னன் கோப்பெருஞ்சோழன், காளிதேவியின் பெருமையை அறிந்து, இங்கே கோயில் கட்டி, தேவியை வழிபட்டு, போர்களில் வெற்றி வாகை சூடினான் என்கிறது ஸ்தல வரலாறு.
  எட்டுத் திருக்கரங்கள். கரங்களில் ஆயுதங்கள். ஒருகாலைத் தூக்கிய நிலையில், கடும் உக்கிரமாகக் காட்சி தருகிறாள் தில்லைக்காளி. அற்புதமான ஆலயம். உள்ளே, மேற்குப் பார்த்தபடி சாந்த முகத்துடன் தில்லையம்மனும், கிழக்குப் பார்த்தபடி உக்கிரமாக தில்லைக் காளியும் தனிச் சந்நிதிகளில் அற்புத தரிசனம் தருகின்றனர்.
  திருமண தோஷத்தால் கலங்குவோர், பிள்ளை பாக்கியம் இல்லையே என வருந்துவோர்,  செய்வினை மற்றும் பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள், கடன் தொல்லையிலிருந்து மீளமுடியவில்லையே என  கண்ணீர் விடுவோர், எதிரிகள் தரும் இன்னல்களிலிருந்து விடுபட வழி தெரியாமல் கைபிசைந்து தவிப்பவர்கள் ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை மற்றும் பௌர்ணமி என ஆடி மாதம் முழுவதும் எந்த நாளிலேனும் இங்கு வந்து தில்லைக்காளியம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்கிறார்கள். வெள்ளை நிற வஸ்திரம் சார்த்துகின்றனர்.  குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.  நிம்மதியும் சந்தோஷமுமாக திரும்பிச் செல்கின்றனர். 
  சிதம்பரத்துக்கு வாருங்கள். தில்லைக் காளியை வணங்குங்கள். பிறகு நடனநாயகனான நடராஜப் பெருமானை தரிசியுங்கள். 
தில்லைக்காளியே உன் திருவடி சரணம்! 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x