காவிரியே போற்றி போற்றி! - ஆடிப்பெருக்கு அற்புதம்   

காவிரியே போற்றி போற்றி! - ஆடிப்பெருக்கு அற்புதம்   
Updated on
1 min read

வி.ராம்ஜி

   ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே!’ என்பார்கள்.  பழிப்பதற்கும் நகைப்பதற்கும் உரியதல்ல தண்ணீர்.  மாறாக, போற்றி வணங்கக்கூடியது. ‘தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடு’ என்று அறிவுறுத்திய தேசத்தில், தண்ணீரின் உறைவிடமான நதியைக் கொண்டாடவும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமான கொண்டாட்டம்... ஆடிப் பெருக்கு எனும் விழா! காவிரித் தாயைக் கொண்டாடி மகிழ்கிற வைபவம் இது!

  பெண்களைப் போல் தியாக குணமும் பாரபட்சமற்ற தயாள குணமும் கொண்டிருப்பதால் நதிகளுக்குக் காவிரி, கங்காதேவி, துங்கபத்ரா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை என பெண்களின் பெயரைச் சூட்டியதில் வியப்பு இல்லைதான்.
  தாமிரபரணி, வைகை, பாலாறு என தமிழகத்தின் பல ஊர்களில் நதிகள் இருந்தாலும், நதிதேவதையைக் கொண்டாடுகிற பழக்கம், ஆடிப்பெருக்கு எனும் பெயரில் வழிபடுகிற விஷயம், காவிரி நதிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு!

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, ஒகேனக்கல், மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி வழியே புகுந்து புறப்பட்டு, தஞ்சை தேசத்தை அடைந்து, பிறகு கும்பகோணம், மயிலாடுதுறை வரை பாய்ந்து, பூம்புகாரில் கடலுடன் கலக்கிறது காவிரி. அதனால்தான் பூம்புகாரை காவிரி புகும்பட்டினம் என்றே அழைத்தார்கள். அது பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் என மருவியது.

‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்று சோழவளத்தையும் நாட்டின் சிறப்பையும் பெருமையுடன் சொல்வார்கள். அத்தனை செழிப்புக்கும் சிறப்புக்கும் காரணம்... காவிரி ஆறு. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த சோழ தேசம் நன்றாக இருந்தால்தான், நன்றாக விளைந்தால்தான் மொத்த தமிழகமும் பஞ்சமில்லாமலும் பட்டினி இல்லாமலும் இருக்கும். அதற்கு அமோக விளைச்சல் தேவை. அந்த விளைச்சலைப் பெருக்கித் தருவதற்கு நீர் ஆதாரம் மிக மிக அவசியம். அதனை, பசியுடன் அழும் கன்றுக்கு ஓடி வந்து பால் புகட்டுகிற வாஞ்சையுடன், காவிரித்தாய் கர்நாடகத்தில் இருந்து காடு மலையெல்லாம் கடந்து நடந்தும், ஓடியும், பாய்ந்தும் வருகிறாள். அதனால்தான் ‘நடந்தாய் வாழி காவிரி’ என்று நதித் தாயைப் போற்றினார்கள் முன்னோர்கள்.
ஆடிப்பெருக்கு நன்னாளில், காவிரியை வணங்கி வரவேற்போம். பெருக்கெடுத்து ஓட பிரார்த்திப்போம்!
ஆடிப்பெருக்கு நாளைய தினம் சனிக்கிழமை (3.8.19). 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in