Published : 02 Aug 2019 12:57 PM
Last Updated : 02 Aug 2019 12:57 PM

ஆடிப்பூரம்... வளையலும் ரவிக்கையும் கொடுத்தால்... வரங்கள் அனைத்தும் தருவாள் ஆண்டாள்!  

வி.ராம்ஜி
 ஆடிப்பூர நன்னாளில், ஆண்டாளை தரிசிப்போம். அவளின் பேரருளைப் பெறுவோம். 
ஆடி மாதத்தில் முக்கியமான வைபவங்களில் ஆடிப்பூரமும் ஒன்று. ஸ்ரீஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில், ஆடி மாத பூர நட்சத்திர நாளில், சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், வெற்றிலை-ப்பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.  குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் என்பது நம்பிக்கை.
  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீரங்கமன்னார் கோயில், மன்னார்குடி  ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதுமட்டுமின்றி, பெருமாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் பலவற்றிலும் இந்தநாளில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் கோலாகலமாக நடந்தேறும். 
   மேலும், ஆடிப்பூர நாளில், அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் பூஜையறையில் வைத்து வணங்கினாலோ, பெண்கள் கைகளில் அணிந்துகொண்டாலோ... சர்வ மங்கலங்களும் பெருகும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இல்லத்தில் செல்வ கடாக்ஷம் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 
இந்த முறை ஆடிப்பூரம்... ஆடிப்பெருக்கு நாளில், நாளைய தினம் (3.8.19) சனிக்கிழமை வருகிறது என்பது கூடுதல் விசேஷம். ஆகவே, ஆண்டாளை தரிசனம் செய்யுங்கள். அம்மன் கோயிலில் வழிபடுங்கள். வளையல் வாங்கிக் கொடுங்கள். ரவிக்கை வாங்கிக் கொடுங்கள். வரம் அனைத்தும் பெறுவீர்கள். 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x