Published : 02 Aug 2019 11:05 AM
Last Updated : 02 Aug 2019 11:05 AM

கல்யாண வரம் தரும் திரிசூலம் திரிபுரசுந்தரி! 

வி.ராம்ஜி
சென்னையில் இருந்து தாம்பரம் செல்லும் வழியில், விமானநிலையத்துக்கு அருகில் உள்ளது திரிசூலம் ரயில் நிலையம். இங்கே உள்ள ரயில்வே கேட்டைக் கடந்து சுமார் ஒரு கி.மீ. பயணித்தால், கல்யாண வரம் தரும் திரிசூலநாதர் ஆலயத்தை அடையலாம். இங்கே,  நம் வாழ்க்கையை உயர்த்தித் தர... திரிசூலநாதரும் திரிபுரசுந்தரி அம்பாளும் நமக்காகக் காத்திருக்கிறார்கள்.
நான்கு மலைகளும் நான்கு வேதங்களாகச் சூழ்ந்திருக்க, நடுவே அமைந்திருக்கிறது திரிசூலநாதர் திருக்கோயில். சிவனாரின் கையில் உள்ள சூலத்தில், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளும் இணைந்திருப்பதாகச் சொல்கிறது புராணம். எனவே, அத்தனை சக்திகளையும் ஒருங்கே கொண்டு இங்கே வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கு, திரிசூலநாதர் எனும் திருநாமம் அமைந்தது. சக்தி வாய்ந்த இவரின் சந்நிதியில் ஒருமுறை நின்றாலே போதும்.. நம்மை ஒவ்வொரு முறையும் வரச் செய்து, நம்மை மேம்படுத்தி விடுவார் சிவபெருமான் என்கிறார்கள் பக்தர்கள்.
படைப்புத் தொழிலை இன்னும் செம்மையாகச் செய்ய, பிரம்மா இங்கே இந்தத் தலத்தில் அமர்ந்து தவம் புரிந்தார் என்கிறது ஸ்தல புராணம். அதனால்தான், இந்தத் தலத்துக்கு பிரம்மபுரி என்றும் பெயர் அமைந்தது. சிவலிங்கத்துக்கு அபிஷேகிக்க, அவர் உண்டு பண்ணிய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் கூட, சிவனாருக்கும் அம்பாளுக்கும் இந்தத் தீர்த்தமே அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. 
இந்தத் தலத்தின் இன்னொரு விசேஷம்... திரிசூல நாதரின் கருவறையானது, கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளது. அதாவது யானையின் பின்புறம் போல் அமைந்திருக்கிறது. தூங்கானை மாடக் கோயில் வரிசையில் இந்தக் கோயிலும் உண்டு. தொண்டை மண்டலக் கோயில்களில், கஜப்பிருஷ்ட கோயில்கள் அதிகம் அமைந்திருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அம்பாளின் திருநாமம் திரிபுரசுந்தரி. நின்ற திருக்கோலத்தில், கம்பீரமும் அழகுமாகக் காட்சி தருகிறாள். கரங்களில் அட்சமாலையையும் தாமரை மலரையும் ஏந்தியபடி காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்பிகையை வணங்கினால், கல்வி, ஞானம், யோகம் அனைத்தும் பெறலாம். சகல செல்வங்களையும் தந்தருள்வாள் அன்னை என்று போற்றுகின்றனர் பக்தர்கள். 
இந்தக் கோயிலில், விநாயகர், சீனிவாசப் பெருமாள், சுப்ரமணியர், நால்வர், ஆஞ்சநேயர் ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். 
இந்தக் கோயிலின் இன்னொரு விசேஷம்... இங்கே அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. திருமணம் கைகூட வேண்டும், சந்தான பாக்கியம் எனப்படும் பிள்ளை வரம் கிடைக்கவேண்டும், கடனில் இருந்து மீளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிற பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும் பிரார்த்தனை பலித்ததற்காகவும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்து, தரிசிக்கின்றனர். ஆடி மாதத்திலும் நவராத்திரி காலத்திலும் அம்பாளை தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்து குவிகிறார்கள். அம்பாளுக்கு புடவை சார்த்தி, வளையல் அணிவித்து, தங்கள் குறைகளையெல்லாம் சொல்லிப் பிரார்த்தனை செய்கிறார்கள். தன் பக்தர்களின் குறைகளையெல்லாம் கனிவுடனும் கருணையுடனும் போக்கி அருள்கிறாள் திரிசூலம் நாயகி திரிபுரசுந்தரி. 
கல்யாணம் வரம் தரும் திரிசூலத்துக்கு வாருங்கள். ஞானமும் யோகமும் தரும் திரிசூலநாதரை தரிசியுங்கள். சந்தான பாக்கியமும் சகல செல்வங்களும் தந்து, உங்கள் கஷ்டத்தையும் துக்கத்தையும் போக்கியருளும் திரிபுரசுந்தரியை கண்ணார தரிசியுங்கள். கேட்ட வரங்களைத் தந்து மகிழ்விப்பாள் அன்னை திரிபுரசுந்தரி. 


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x