

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் விழாவில் சயனகோல தரிசனம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்றுமுதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார். மொத்தம் 48 நாட்கள் இந்த மண்டபத்தில் இருந்து பக்தர் களுக்கு தரிசனம் அளிக்கிறார்.
விழா தொடங்கும்போது முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 31 நாட்களாக அத்திவரதர் சயன கோலத்திலேயே வைக்கப் பட்டார். சயன கோல தரிசனம் நேற்றுடன் நிறைவு பெற்றது. அத்திவரதர் நேற்று மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கிழக்கு கோபுர வாசல் வழி யாக நண்பகல் 12 மணிவரை பொது தரிசனத்துக்கு கோயிலுக் குள் பொதுமக்கள் அனுமதிக்கப் பட்டனர். அதன் பின்னர் கோயிலுக் குள் வந்துவிட்டவர்கள் மட்டும் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப் பட்டனர். முக்கியப் பிரமுகர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் ஆகியோர் அத்தி வரதரை மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.
மாலை 5 மணிக்கு பிறகு கோயிலின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டன. காலை 10 மணிக்கு மேல் பொது தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சுமார் 30 நிமிடங்களில் எளிதாக தரிசனம் செய்தனர். ஆனால், முக்கியப் பிரமுகர்கள் வரிசையில் கூட்டம் அதிகரித்ததாலும், துணை முதல்வர் வரும்போது தரிசனம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாலும் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்த பிறகே தரிசனம் கிடைத்தது.
துணை முதல்வர் வழிபாடு
அத்திவரதரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வழிபட்டார். மிக முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் வந்த அவரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வரவேற்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. முன்னாள் எம்பி வைகைச் செல்வன், மாவட்டச் செயலர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் உட்பட பலர் உடன் சென்றனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும் தனியாக வந்து அத்திவரதரை வணங்கினார்.
நின்ற கோலம் பணிகள்
அத்திவரதர் தரிசனம் நேற்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு அதன் பின்னர் நின்ற கோலத்தில் வைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் கோயிலுக்குள் முக்கிய பட்டாச்சாரியார்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. கோயிலின் மேற்கு கோபுர வாயிலில் போலீஸார் குவிக்கப்பட்டனர். கடந்த ஒரு மாதமாக மக்கள் கூட்டமாக இருந்த காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலை மாலை 5 மணிக்கு மேல் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த 1979-ம் ஆண்டு எந்த பீடத்தின் மீது அத்திவரதர் நிறுத்தப்பட்டாரோ அதே பீடத்தின் மீது இப்போதும் நிறுத்தும் பணிகள் நடைபெற்றன. இன்று காலை (ஆகஸ்ட் 1) முதல் அத்திவரதரை பக்தர்கள் நின்ற கோலத்தில் தரிசிக்கலாம்.
கடந்த 31 நாட்களில் முதல் வாரம் மட்டும் பக்தர்களின் ஒருநாள் வருகை சராசரியாக ஒரு லட்சமாக இருந்தது. அதன் பின்னர் சராசரியாக 2 லட்சம் பேர் தினந்தோறும் வருகின்றனர். நின்றகோலத்தில் இருக்கும் அத்திவரதரை தரிசிக்க கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக 2,500 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தடுக்க அவர்கள் தங்கிச் செல்லும் இடங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மண்டபம் புதுப்பிப்பு
அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள மண்டபத்தில் நீருக்கடியில் அத்திவரதர் வைக்கப்பட்டிருந்தார். அந்த மண்டபம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த மண்டபம் முழுமைக்கும் புதிதாக வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.