

வி.ராம்ஜி
நாளை 31ம் தேதி புதன்கிழமை, அமாவாசை. அதிலும் முக்கியமான அமாவாசை. ஆடி அமாவாசை. இந்த ஆடி அமாவாசை நாளில், உங்கள் முன்னோர்கள், நீங்கள் உங்கள் கடமையை, ஆராதனையைச் செய்வீர்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். உங்கள் பித்ருக்கடனை செய்வதில், குளிர்ந்து போய், உங்களையும் உங்கள் வம்சத்தையும் ஆசீர்வதிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அமாவாசை என்பது பித்ருக்களுக்கான நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசை நாளில், தர்ப்பணம் செய்து, முன்னோர்களை வழிபடச் சொல்கிறது சாஸ்திரம். அதேபோல், வருடத்துக்கு மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக சொல்லப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை... இந்த மூன்று அமாவாசைகளில் மறக்காமல், தவறவிடாமல் முன்னோர் ஆராதனை செய்ய வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நாளை 31.7.19 ஆடி அமாவாசை. இந்தப் புண்ணியநாளில், முன்னோர் ஆராதனை செய்ய மறக்காதீர்கள். இந்தநாளில், தர்ப்பணம் முதலான சாஸ்திர காரியங்களைச் செவ்வனே செய்யுங்கள். வீட்டில் பித்ருக்களின் படங்களுக்கு, பூக்களால் அலங்கரியுங்கள். அவர்கள் படங்களுக்கு தூபதீபம் காட்டுங்கள். பூஜையறையில் விளக்கேற்றுங்கள்.
தம்பதி சமேதராக அவர்களின் படங்களுக்கு முன்னே நமஸ்கரித்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து அவர்களை வழிபடுங்கள். அந்த நைவேத்திய உணவை, காகத்துக்கு வழங்குங்கள்.
மேலும் உங்கள் முன்னோர்களை நினைத்து, ஐந்து பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நீங்கள் செய்யும் இந்த அன்னதானத்தில் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள். அவர்களின் ஆத்மா, உங்களையும் உங்கள் வம்சத்தையும் இனிதே வாழச் செய்யும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டமும் துக்கமும் காணாமல் போகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கச் செய்து, உங்கள் குடும்பத்தை சந்தோஷத்துடனும் குதூகலத்துடனும் வாழச் செய்வார்கள் முன்னோர்கள்.